இந்திய வரலாற்றில் முதன்முறையாக குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்து அசத்தி இருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு.
நமது பாரத நாட்டின் 75-வது குடியரசு தின விழா வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் மிகப்பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறவிருக்கிறது. பொதுவாகவே, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற விழாக்கள் நடைபெறும்போது, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களை மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு குடியரசு தின விழா அணிவகுப்புக்கு சற்றே வித்தியாசமாக சமுதாயத்தில் சாமானியர்களான ஆட்டோ டிரைவர்கள், தூய்மைப் பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு.
இதுகுறித்து சீனியர் ராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகையில், “சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் நோக்கம். அந்த வகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள இதுவரை வாய்ப்புக் கிடைக்காத சாதாரண தொழிலாளர்களான ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள், கட்டடக் கூலித் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி தொழிலாளர்கள் அழைக்கப்படுவது இந்திய வரலாற்றில் இதுதான் முதன்முறை” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளோ, பாராட்டுவதை விட்டுவிட்டு, அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கவில்லை என்று புறம்கூறி கூக்குரல் எழுப்பி வருகின்றன. இதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.