மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு – சரியா தவறா ?

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு – சரியா தவறா ?

Share it if you like it

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு – சரியா தவறா ?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்து மதத்தை சேர்ந்த பட்டியலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தீண்டாமை கொடுமைகளால் சமுதாயத்தில் ஒடுக்கப்படும் பட்டியலின மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் சமுதாயத்தில் சமுத்துவத்தை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேசமயம் மதம் மாறும் பட்டியலினத்தவருக்கு இந்த சலுகைகள் மறுக்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட பிற மதங்களில் இல்லை. இதனால் மதம் மாறும் பட்டியலித்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோர முடியாது.
ஆனால் பல காலமாக இந்தியாவில் மதம் மாறும் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பலர் தாங்கள் மதம் மாறியதை மறைத்து சட்டவிரோதமாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் மதம் மாறும் பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்ற பிரச்சாரம் தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு ‘‘இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களில், தீண்டாமை கொடுமை இல்லை. பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறித்துவம் போன்ற மதங்களுக்கு மாறுவதற்கு முக்கிய காரணம், தீண்டாமையின் ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான். எனவே கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்.சி சாதி அந்தஸ்து வழங்க முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். எனவே அவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில் இன்று தமிழக அரசு மதம் மாறிய பட்டியலின கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளும் திமுக அரசு சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தக்கவைக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தீண்டாமை கொடுமையில் இருந்து வெளியேற பிற மதங்களுக்கு மாறியவர்கள் இந்து பட்டியனத்தவருக்கு வழங்கப்படும் சலுகைகளை சுரண்ட தயங்குவதில்லை. மேலும் இவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர் தங்களை உயர்வானவர்களாக கருதி இந்து பட்டியலினத்தவரை கேவலமாக நடத்தும் கொடுமையும் நடந்து வருகிறது. பட்டியலினத்தவர் மட்டுமல்லாமல் மதம் மாறும் பழங்குடியினர் மத்தியிலும் இதே சூழ்நிலை உள்ளது.

இஸ்லாம் மதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் சமம் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்கிடையே சாதி அமைப்பு இல்லாத போது, ஏன் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்? கிறித்தவமும் சாதி அமைப்பிலிருந்து விடுபட்டதாகப் பெருமை கொள்கிறது. சாதியே இல்லாத சமூகத்தில் சாதி இட ஒதுக்கீட்டின் பலன் மட்டும் எதற்கு?

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட போது கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அப்போது யாரும் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் தீண்டாமை கொடுமைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடிய டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து மாற விரும்பிய போது அவரை இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்திற்கு மதம் மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் பிற மதங்களை பற்றி நன்றாக ஆய்வு செய்து இறுதியில் புத்த மதத்தை தேர்வு செய்தார்.

அதற்கு விளக்கம் அளித்த அம்பேத்கர் இந்தியாவில் தோன்றாத அந்நிய மதங்களுக்கு மாறினால், அவர்களுக்கு தேசத்தின் மீதான கண்ணோட்டம் மாறிவிடும். இஸ்லாம் மதத்திற்கு மாறினால், முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அல்லது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டால், இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கான துரோகிகளின் பலம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தில் சாதி பிரிவினைகள் இல்லை என்றாலும் அவர்களுக்குள் இனம், மொழி சார்ந்த பல பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளதை சுட்டிக்காட்டிய அம்பேத்கர் இந்த இரு மதங்களிலும் சமூதாய சீர்திருத்தத்திற்கு சாத்தியமில்லை என உறுதியாக கூறினார். இதனால் பட்டியலினத்தவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதை அம்பேத்கர் விரும்பவில்லை.

அதன் விளைவாக, டாக்டர் அம்பேத்கர் 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி மகாராஷ்டிராவில் நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியில் பகிரங்கமாக புத்த மதத்திற்கு மாறினார். அதே விழாவில் அவரைப் பின்பற்றியவர்களில் சுமார் 3,80,000 பேர் புத்த மதத்துக்கு மாறினார்கள்.

ஒருவேளை பாபாசாகேப் அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்திருந்தால் பிற மதங்களை ஏற்றுக்கொண்ட பட்டியலினத்தவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு வசதிகளை உடனடியாக ஒழித்திருப்பார். மேலும் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி வரும் பலருக்கு மதம் மாறியவர்களுக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்பதே உண்மை.


Share it if you like it