அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.5 கோடி சுருட்டல்… தி.மு.க. பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.5 கோடி சுருட்டல்… தி.மு.க. பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

Share it if you like it

அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றி 5 கோடி ரூபாய் சுருட்டிய தி.மு.க.வைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு அருகே உள்ளது பெண்ணக்கோணம் ஊராட்சி. இதன் தலைவியாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயலட்சுமி. இவரது மகன் சந்தோஷ்குமார். இவரும், இவரது மனைவி சிவசங்கரியும் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த சூழலில், மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள்.

இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள், இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சந்தோஷ்குமாரின் மனைவி சிவசங்கரியை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தோஷ்குமாரை தேடி வந்தனர். இந்த சூழலில், சந்தோஷ்குமாரின் தாயாரும், தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியுமான ஜெயலட்சுமியும் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது.

அதிக வட்டி தருவதாகக் கூறி, ஜெயலட்சுமியும் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 6 பேரிடம் 5.20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார். ஆனால், சொன்னபடி யாருக்கும் வட்டியும் தரவில்லை, அசலையும் தரவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 6 பேரும் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜெயலட்சுமி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆட்சிக்கு வந்ததும் போதும், உங்க கட்சிக்காரங்க அட்ராசிட்டி தாங்க முடியலியேப்பா…!


Share it if you like it