அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் !

அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் !

Share it if you like it

நாகபுரி தீர்மானம் :

அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ் :-

“புதிய பாரத உதயத்திற்கு கட்டியம்”!

நாகபுரியில் 2024 மார்ச் 15,16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் இயற்றபட்ட தீர்மானங்கள் :

“ஸ்ரீ ராமர் அவதரித்த தலத்தில் 2024 ஜனவரி 22 அன்று ஸ்ரீ ராம் லலா (குழந்தை ராமர் ) விக்ரகத்தின் மகத்தான தெய்வீக பிரதிஷ்டை உலக வரலாற்றின் ஈடிணையற்ற பொன்னேடாக அமைந்தது. வணக்கத்திற்குரிய மகான்கள், ஆன்றோர் வழிகாட்டுதலில் நாடு தழுவிய அளவில் ஹிந்து சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுக்கால தொடர் போராட்டமும் தியாகமும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் ஒருமித்த திடவுறுதி ஆகியவை மோதலின் ஒரு நீண்ட அத்தியாயத்திற்கு மகிழ்ச்சியான தீர்வு தந்தன. இந்த நன்னாளை கண்கூடாக காணும் பெரும் பேற்றின் பின்னணியில் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள், தியாகம் புரிந்த கரசேவகர்கள், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயம், அரசு நிர்வாகம் என அனைவர் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் அகில பாரத பிரதிநிதி சபை சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதுடன், மேற்கூறிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீ ராமர் கோவிலில் பூசிக்ககப்பட்ட அட்சதை விநியோக இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் தீவிரமாகப் பங்கேற்றார்கள். லட்சக்கணக்கான ராம பக்தர்கள் அனைத்து நகரங்களிலும், பெரும்பாலான கிராமங்களிலும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களைத் தொடர்பு கொண்டனர். 2024 ஜனவரி 22 அன்று, பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அற்புதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வீதி தோறும் ஊர் தோறும் தன்னெழுச்சியான ஊர்வலங்கள், ஒவ்வொரு வீட்டிலும் தீபத் திருவிழா, கோயில்கள், மடங்களில் காவிக்கொடி தாங்கி பஜனை போன்றவற்றால் சமுதாயத்தில் ஒரு புதிய ஆற்றல் பொங்கியது.

“அயோத்தி பிரதிஷ்டை நன்னாளில், நாட்டின் மத, அரசியல் சமதாய வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் வந்து கலந்து கொண்டதும் அனைத்து சம்பிரதாயங்கள், மதங்களின் மரியாதைக்குரிய துறவிகள் வந்திருந்ததும் ஸ்ரீ ராமபிரானின் லட்சியங்களுக்கு ஏற்ப இணக்கமான, நன்கு ஒருங்கிணைந்த தேசிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்தது. தேசிய மறுமலர்ச்சியின் புகழ்பெற்ற அத்தியாயத்தின் தொடக்கத்தையும் இது குறிக்கிறது. ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ராம் லலாவின் (குழந்தை ராமரின்) விக்ரக பிரதிஷ்டையால், அந்நியர்களின் ஆட்சிக் காலத்திலும், போராட்டக் காலத்திலும் ஏற்பட்ட அவநம்பிக்கை தன்னுணர்வின்மை ஆகியவற்றை உதறி சமுதாயம் வெளிவருகிறது. ஒட்டுமொத்த சமுதாயமும் ஹிந்துத்துவ உணர்வில் திளைத்து, தன் “சுயத்தை” அறிந்து அதன் அடிப்படையில் வாழத் தயாராகி வருகிறது.

மரியாதா புருஷோத்தமராம் அண்ணல் ராமனின் வாழ்க்கை, சமூகப் பொறுப்புகளில் உறுதியாக இருந்து, சமுதாயத்திற்காகவும், தேசத்திற்காகவும் தியாகம் புரிய நமக்கு உந்துதல் தருகிறது. ராமரின் ஆட்சி முறை உலக வரலாற்றில் “ராம ராஜ்யம்” என்ற பெயரில் இடம் பெறுகிறது. அதன் கொள்கைகள் அனைவருக்குமானவை; நித்தியமானவை. வாழ்க்கை விழுமியங்களின் சீரழிவு, மனித உணர்வுகளின் சரிவு, அதிகரித்து வரும் வன்முறை, நாடுபிடிக்கும் கொடுமை போன்ற சவால்களை எதிர்கொள்ள ராமராஜ்ய கருத்து முழு உலகிற்கும் இன்றும் முன்மாதிரியாக உள்ளது.

“ராமபிரானின் லட்சியங்களை வாழ்வில் நிலைநிறுத்துவதற்கு ஒட்டுமொத்த சமுதாயமும் உறுதிமொழி எடுக்க வேண்டும், அப்போதுதான் ராமர் கோயில் புனரமைப்பு நோக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது பிரதிநிதி சபையின் திடமான கருத்து. இன்று சமுதாயத்தில் ஸ்ரீராமரின் வாழ்க்கை காட்டும் தியாகம், அன்பு, நீதி, வீரம், நல்லிணக்கம், நியாயம் போன்ற நிரந்தரப் பண்புகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். அனைத்து வகையான பரஸ்பர பகைமை, வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதே ஸ்ரீராமரின் உண்மையான வழிபாடு.

“சகோதரத்துவம், கடமை, கௌரவமான சமூக நீதி ஆகியவற்றை உறுதி செய்யும் திறன்மிக்க பாரதத்தை உருவாக்க அனைத்து பாரதியர்களுக்கும் பிரதிநிதி சபை வேண்டுகோள் விடுக்கிறது. நலன்கள் எல்லாம் கொண்ட உலகளாவிய அமைப்பை உருவாக்குவதில் பாரதம் அப்போதுதான் முக்கிய பங்கு வகிக்க முடியும்”.


Share it if you like it