மோகன் பாகவத்துக்கு ‘தேசப் பிதா’ புகழ்ச்சி: தலைமை இமாமுக்கு கொலை மிரட்டல்!

மோகன் பாகவத்துக்கு ‘தேசப் பிதா’ புகழ்ச்சி: தலைமை இமாமுக்கு கொலை மிரட்டல்!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை தேசப் பிதா என்று கூறிய அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி டெல்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள ஒரு மசூதிக்குச் சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர், மோகன் பாகவத்தை ‘ராஷ்டிர பிதா’ (தேசத்தின் தந்தை) என்றும், ‘ராஷ்டிர ரிஷி’ (தேசத்தின் ரிஷி) என்றும் உமர் அகமது இலியாசி குறிப்பிட்டார். ஆனால், மோகன் பாகவத்தோ, ‘நமது தேசத்தின் தந்தை ஒருவரே’ என்று கூறி இலியாசியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்தார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு, இமாம்களின் தலைவரான உமர் அகமது இலியாசிக்கு, முஸ்லிம்கள் சமூகத்திடம் இருந்தே கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தியா மட்டுமில்லாது, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்தன. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்த இலியாசி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவித்தார். இதை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், தற்போது இலியாசிக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய இலியாசி “உள்துறை அமைச்சகம் வழங்கிய ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பிற்காக நான் மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். இங்கிலாந்தில் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல்களுக்கு எதிராக புகார் கொடுத்து 3 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அடிபணியப் போவதில்லை. அதேபோல, நான் கூறிய கருத்துகளில் இன்னும் உறுதியாக நிற்கிறேன். இந்தியா செழிப்படைவதை பார்க்க சகிக்காத தேச விரோத சக்திகள்தான் இதுபோன்று மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்” என்று கூறினார்.


Share it if you like it