ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது 1925 ஆம் ஆண்டு விஜயதசமி திருநாளில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் டாக்டர்.கேசவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கி இன்றுடன் 98 வருடங்கள் ஆகியுள்ளது. தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத தலைவராக திரு.மோகன் பகவத் உள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு.மோகன் பகவத் அவர்கள்,ஒவ்வொரு வருடமும் விஜயதசமி நாளில் நாக்பூரில் உரையாற்றுவார். இந்நிலையில் விஜயதசமி திருநாளான இன்று நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு.மோகன் பகவத் உரையாற்றினார். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி பாடகர் திரு.ஷங்கர் மஹாதேவன் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் திரு.ஷங்கர் மஹாதேவன் பேசியதாவது ;-
அறிவு கடவுளான சரஸ்வதிக்கு வணக்கத்தை செலுத்தி எனது உரையை தொடங்குகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும்படி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அதிர்ஷ்டசாலி. அவரது அழைப்பை ஏற்ற பிறகு பலரும் என்னை தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
அகண்ட பாரதம் என்கிற சித்தாந்தத்தை பாதுகாப்பதிலும், நமது கலாச்சாரம்,பாரம்பரியம் ஆகியவற்றை காப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றவர்களை விட அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளது. இந்திய குடிமகனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். பொதுமக்கள் தாங்கள் பணியாற்றும் துறைகள் மூலம் அளப்பரிய சேவை செய்து நாட்டுக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு திரு.ஷங்கர் மஹாதேவன் பேசினார்.