கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான எஸ்.டி.பி.ஐ. என்கிற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்தவர் சஞ்சித். 27 வயதான இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேனேரி பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர், கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்கிற இஸ்லாமிய அரசியல் கட்சியின் கிளை அமைப்பான எஸ்.டி.பி.ஐ. என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சஞ்சித்தை காரில் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
பாலக்காடு அருகேயுள்ள மாம்பரம் என்ற இடத்தில் வந்தபோது, எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் தாங்கள் வந்த காரில் சஞ்சித்தின் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியிருக்கிறார்கள். இதில், நிலைகுலைந்த சஞ்சித், மனைவியுடன் கீழே விழுந்திருக்கிறார். உடனே, காரில் இருந்து இறங்கிய எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், அவரது மனைவியின் கண்முன்பே சஞ்சித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில், எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முக்கியக் குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். இதன் மூலம் சஞ்சித்தின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.