நுபுர் ஷர்மாவை கொல்ல தற்கொலை தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது!

நுபுர் ஷர்மாவை கொல்ல தற்கொலை தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது!

Share it if you like it

இந்தியாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா உட்பட முக்கியத் தலைவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, படுகொலை செய்ய அனுப்பப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை, ரஷ்ய உளவுத்துறையினர் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈராக், சிரியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு. இந்த அமைப்பினர், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து, நாசவேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்று நாசவேலைகளில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ். உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை, ரஷ்யாவின் உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி. எனப்படும் ‘பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ்’ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துருக்கியைச் சேர்ந்தவன் அசாமோவ். இவன், சமூக வலைத்தளங்கள் மூலம் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருக்கிறான். இந்த சமயத்தில்தான் பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமிய இறை தூதரான முகமது நபியைப் பற்றி பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி நுபுர் ஷர்மாவை படுகொலை செய்வதற்காக, அசாமோவ் மூளைச்சலைவை செய்யப்பட்டிருக்கிறான். இதற்காக, அசாமோவுக்கு பயங்கரவாத பயிற்சிகள் அளித்து, படுகொலை செய்யும் பணியை ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் பிறகு, இந்திய விசா பெறுவதற்காக துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். ஆனால், ரஷ்ய உளவுத் துறையான எப்.எஸ்.பி. பயங்கரவாதியை கைது செய்து அதிரடி காட்டி இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஒரு தற்கொலைப் படை பயங்கரவாதி பற்றி, ஒரு வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 2 தற்கொலைப் படை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக, அந்த நிறுவனம் கூறியிருந்தது. மேலும், அந்த 2 பேரில் ஒருவன் துருக்கியைத் தளமாகக் கொண்டவன் என்றும், இருவரும் ரஷ்யா வழியாக இந்தியாவுக்கு வருவார்கள் என்றும் எச்சரித்திருந்தது. அதோடு, அவர்களின் விசா விண்ணப்பம் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய தூதரகம் அல்லது வேறு ஏதேனும் துணை தூதரகத்திற்கு ஆகஸ்ட் மாதம் செல்லும் என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்திய தூதரகம் மூலம் மேற்கண்ட விவரங்கள் ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதுதான் மேற்கண்ட பயங்கரவாதி அசாமோவை ரஷ்ய ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் கைது செய்ய வழிவகுத்திருக்கிறது.


Share it if you like it