தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நிலையில், தலைநகரமே ஸ்தம்பித்தது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியல்களை வெளியிட்டார். இந்த லிஸ்ட்டில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் சொத்துப் பட்டியலும் இடம்பெற்றிருந்தது. இதனால் அதிர்ந்துபோல தி.மு.க.வினர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அவர் மீது வழக்குத் தொடரப்போதவதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்படி, சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்மையில் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் அண்ணாமலை. அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3-ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. தி.மு.க. ஃபைல்ஸ் பாகம் 2 விரைவில் வெளியிடப்படும். இதில், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்குச் சென்ற அமைச்சர்கள்தான் அதிகம் உள்ளனர்” என்று கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை ஆஜராகும் தகவல் பரவியதால், பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கோர்ட் வளாகத்தில் திரண்டனர். மேலும், ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கோர்ட்டை நோக்கி படையெடுத்தனர். இதனால், தலைநகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து சரியாக சுமார் 1 மணி நேரமானது.