சேலத்தில் மாற்றுத் திறனாளிக்காக பொதுமக்கள் கட்டிக் கொடுத்த வீட்டை, தி.மு.க. நிர்வாகி ஒருவர் இடித்து தரைமட்டமாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் செட்டிச்சாவடி ஊராட்சி 4வது வார்டைச் சேர்ந்தவர் சங்கர். மாற்றுத் திறனாளியான இவர், தனது தாயார் சரஸ்வதியுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென சொந்தமாக வீடு இல்லாத நிலையில், தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அப்பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்ற அப்பகுதி மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த அப்பகுதி தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் சௌந்தர்ராஜன், தன்னைக் கேட்காமல் எப்படி புறம்போக்கு இடத்தில் வீடு கட்டலாம் என்று கூறி, பாதியளவுக்கு கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டார். இதையறிந்த ஊர்மக்கள் அப்பகுதியில் திரண்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகளும் தி.மு.க. நிர்வாகி சௌந்தர்ராஜனுக்கு ஆதரவாகவே பேசினர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், முறைப்படி மாற்றுத் திறனாளிக்கு அரசுதான் வீடு கட்டித் தரவேண்டும்.
தி.மு.க. அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் பொதுமக்களாகிய நாங்களே வீடு கட்டித் தர நடவடிக்கை எடுத்தோம். அதையும் தி.மு.க. நிர்வாகி தடுப்பது எந்தவிதத்தில் நியாயம். ஆகவே, தி.மு.க. நிர்வாகி சௌந்தர்ராஜன் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.