சேலத்தில் ஹிந்து விரோத பிரசாரத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினரை ஹிந்து பெண்கள் விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழகம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர் ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து மத கடவுளுக்கு எதிராகவும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அவ்வப்போது பா.ஜ.க.வை கண்டித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் வழக்கம்போல ஹிந்து விரோத பிரசாரம் செய்ய சேலம் தானாபதியூர் கிராமத்திற்குச் சென்றிருக்கிறார்கள். பிரசாரத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குவிந்து விட்டனர். எதற்காக இங்கு பிரசாரம் செய்ய வந்தீர்கள். இது ஆன்மிக பூமி. நாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இங்கு பிரசாரம் செய்யக் கூடாது கிளம்புங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது, திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்கு எதிராக பெண்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதை வீடியோவாகப் பதிவு செய்த போலீஸார், பொதுமக்கள் எதிர்ப்பால் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி, திராவிடர் விடுதலைக் கழகத்தினரை அங்கிருந்து கிளம்புமாறு அறிவுறுத்தினர். இதனால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திராவிட விடுதலைக் கழகத்தினர் கிளம்பிச் சென்றனர்.