சேலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன் ஒருவர், நடுரோட்டில் பஸ்ஸை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது ஏத்தாப்பூர் பேரூராட்சி. இதன் சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகன். இவர், தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாட விரும்பினார். எனவே, தனது ஆதரவாளர்கள் 100 பேரை திரட்டினார். பின்னர், பிறந்தநாள் விழாவை எங்கு கொண்டாடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். அப்போது உதயமாகி இருக்கிறது தேசிய நெடுஞ்சாலையில் கொண்டாடும் யோசனை. உடனே, தனது கைத்தடிகளை எல்லாம் கூட்டிக் கொண்டு நேராக சேலம் – சென்னை நெடுஞ்சாலைக்குச் சென்றிருக்கிறார்.
புத்தர கவுண்டம்பாளையம் மெயின் ரோடு வந்ததும் அல்லக்கைகள் எல்லாம் நடு ரோட்டில் டேபிளை போட்டு மெகா சைஸ் கேக்கை வைத்தனர். அப்போது அவ்வழியாக ஒரு அரசு பேருந்து மற்றும் கார்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் வந்தன. அவற்றை எல்லாம் அப்படி அப்படியே நிறுத்தனர். பின்னர், கையோடு கொண்டு வந்திருந்த ஆள் உயர மாலை ஒன்றை, அன்பழகனுக்கு அணிவித்தனர். பிறகு, பட்டாசுகள், மத்தாப்புகள், அணுகுண்டுகள் என அதிர்வேட்டுகள் முழங்க கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் அன்பழகன்.
அப்புறமென்ன ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். ஆனால், இவர்களின் கொண்டாட்டம் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்குத்தான் திண்டாட்டமாக மாறிவிட்டது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, தகவல் போலீஸாருக்கு பறக்க, அரக்கப்பரக்க ஓடி வந்திருக்கிறார்கள். பின்னர், போக்குவரத்து சரி செய்யப்பட்டு, வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதேசமயம், இந்த காட்சிகள் அனைத்தையும் உ.பி. ஒருவர், அப்படியே வீடியோ உற்சாகத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டது. இந்த வீடியே தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்து விட்டு ஏராளமானோர் சேர்மன் அன்பழகன் மற்றும் தி.மு.க.வினரின் அராஜகத்தையும், அடாவடித்தனத்தையும் கண்டித்து வருகின்றனர். இதுதான் அன்பழகனுக்கு சிக்கலாகி இருக்கிறது. மேலிடத்திலிருந்து மாவட்டச் செயலாளரை லெப்ட் ரைட் வாங்கி, பதிலுக்கு அன்பழகனுக்கு டோஸ் விட்டிருக்கிறார் மா.செ.