வீட்டு உரிமையாளரை காரித் துப்பிய தி.மு.க. கவுன்சிலர்!

வீட்டு உரிமையாளரை காரித் துப்பிய தி.மு.க. கவுன்சிலர்!

Share it if you like it

சேலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவரை தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் காரித் துப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சி நிர்வாகிகளின் அட்டகாசம், அராஜகம், அடாவடிகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அதேபோல, உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வினரின் கையே ஓங்கியது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க., நகராட்சி, பேரூராட்சிகளிலும் அமோக வெற்றியை பதிவு செய்தது. இதன் பிறகு, தி.மு.க.வினர் வைப்பதுதான் சட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கவுன்சிலர்களில் தொடங்கி, சேர்மன், மேயர் வரை அடிக்கும் கூத்துக்கும் கொட்டத்துக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. துப்புரவுப் பணியாளர்களை துச்சமென மதிப்பது, ஊழியர்களை உதாசீனப்படுத்துவது, அதிகாரிகளை அசால்ட்டாக டீல் செய்வது என கெத்து காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரை தி.மு.க.வைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் காரித் துப்பிய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த அம்சா. இந்த வார்டிலுள்ள அய்யாசாமி தெருவில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டிருக்கிறது. எனவே. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் அம்சாவிடம் கூறியிருக்கிறார்கள். அவரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி, குடிநீர் குழாயை விரைவில் சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பின்னர், அதிகாரிகள் உத்தரவின் பேரில் மேற்படி அய்யாசாமி தெருவுக்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் குழாயை சோதனை செய்தனர். அப்போது, 3 வீடுகளுக்குச் செல்லும் குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். பிறகு, 2 வீடுகளில் இருந்த அடைப்பை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்த பணியாளர்கள், 3-வது வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது, அந்த வீடு பூட்டி இருக்கவே, மாநகராட்சி பணியாளர்கள் அடைப்பை சரி செய்ய முடியாமல் சென்று விட்டனர். மறுநாள் கவுன்சிலர் அம்சா, மேற்படி பகுதிக்கு நேரடியாகச் சென்று, அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டதா என்பது குறித்து விசாரித்திருக்கிறார்.

பின்னர்,, 3-வது வீட்டில் குடிநீர் குழாய் சரி செய்யப்படாததை அறிந்தவர், தனியார் பிளம்பரை அழைத்து வந்து சரி செய்து கொடுத்திருக்கிறார். அப்போது, பிளம்பருக்கான கூலியை கவுன்சிலர் கொடுத்து விடுவது என்றும், பைப் வாங்கிய செலவை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக் கொள்ளுமாறும் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு வீட்டின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்து விட்டார். இதனால், கவுன்சிலர் அம்சாவுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தி.மு.க. பெண் கவுன்சிலர் அம்சா, அந்த வீட்டின் உரிமையாளரை பார்த்து காரி துப்பினார். இந்தக் காட்சிகளை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி, தி.மு.க.வினருக்கு வினையாக மாறி வருகிறது. இதைப் பார்க்கும் அனைவரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it