வியாபாரிகளை மிரட்டி ரூ.500 கட்டாய வசூல்… தி.மு.க. தைரியத்தால் திராவிட விடுதலை கழகத்தினர் அடாவடி!

வியாபாரிகளை மிரட்டி ரூ.500 கட்டாய வசூல்… தி.மு.க. தைரியத்தால் திராவிட விடுதலை கழகத்தினர் அடாவடி!

Share it if you like it

சேலத்தில் நடைபெறும் மாநாட்டுக்காக, திராவிட விடுதலைக் கழகத்தினர், வியாபாரிகளை மிரட்டி 500 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் மக்களின் வசவுகளை பெற்று வருகிறது.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம் என்கிற புதிய அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் தலைவராக கொளத்தூர் மணியும், பொதுச்செயலாளராக விடுதலை ராஜேந்திரனும் இருந்து வருகிறார்கள். இந்த அமைப்பினர் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்த அமைப்பின் மாநாடு சேலத்தில் நாளையும், நாளை மறுநாளும் (ஏப்.29, 30) நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்காக அக்கட்சியினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியிலும் வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்குச் சென்று, கடைக்காரர்களிடம் 500 ரூபாய் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். வேறு வழியின்றி கடைக்காரர்களும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, மகாவீரர் என்பவர் நடத்தி வரும் துணிக்கடைக்கும் சென்று பணம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, வியாபாரம் சரியில்லை என்று சொல்லி 100 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியாபாரம் நடத்திக் கொண்டு, எங்களது மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். உடனே, மகாவீரர் தொலைபேசி மூலம் போலீஸாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியிருக்கிறார். மேலும், திராவிட விடுதலைக் கழகத்தினரின் அடாவடியை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீஸார் அவரை சமாதானப்படுத்தினர்.

இதனிடையே, அடாவடி வசூலில் ஈடுபட்ட திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் தைரியத்தில்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று மக்கள் வசைபாடி வருகிறார்கள்.


Share it if you like it