முதலில் குமுறல்… பிறகு வாழ்த்து… தி.மு.க. எம்.பி.யின் திடீர் பல்டி!

முதலில் குமுறல்… பிறகு வாழ்த்து… தி.மு.க. எம்.பி.யின் திடீர் பல்டி!

Share it if you like it

முதலில் சொந்தக் கட்சியினருக்கு எதிராக குமுறலை வெளிப்படுத்திய தி.மு.க. எம்.பி. ஒருவர், சில மணி நேரங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டு, புதிதாக வாழ்த்துப் பதிவு போட்டிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன். இவர், லோக்கல் தி.மு.க.வினருக்கு எதிராக நேற்று போட்ட ட்விட்டர் பதிவுதான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியது. அதாவது, “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி.க்கு அழைப்புக் கொடுக்கக்கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்புக் கொடுத்தால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான் ஒரு எம்.பி. என்னை மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர், நான் ஏதோ எதிர்க்கட்சி எம்.பி. என்று நினைக்கிறார். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிவார்கள். இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Image

எம்.பி. பார்த்திபன் இப்படியொரு பதிவை போடக் காரணம் என்னவென்றால், இவர், ஏற்கெனவே நடிகர் விஜயகாந்த் கட்சியான தே.மு.திக.வில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அப்போது, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேலம் கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரனை எதிர்த்து அரசியல் செய்தார். இதனால், இருவருக்கும் ஏழாம் பொறுத்தம். இந்த சூழலில், பார்த்திபன் தி.மு.க.வில் இணைந்ததும், அக்கட்சியின் சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதும் ராஜேந்திரனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்கிறார்கள். எனவே, சேலத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் பார்த்திபனை அழைக்கக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ராஜேந்திரன் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம்.

இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மட்டும் அழைக்கப்படவில்லை. இதுதான் பார்த்திபனின் கோபத்துக்குக் காரணம். இதன் காரணமாகவே, அப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கிறார். ஆனால், அந்த ட்வீட் அவருக்கு எதிராகவே திரும்பி விட்டதுதான் பரிதாபம். இந்த ட்வீட் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. அடுத்த சில நிமிடங்களில் இந்த விவகாரம் தி.மு.க. தலைமையின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. உடனே, தலைமையிலிருந்து பார்த்திபனுக்கு போன் போட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார்கள்.

அவ்வளவுதான், ஆடிப்போன பார்த்திபன் அவசர அவசரமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு, அடுத்ததாக ஒரு பதிவை போட்டார். இதில், வேடிக்கை என்னவென்றால், முதல் பதிவில் மாநகராட்சி கமிஷனரை விமர்சித்து பதிவிட்டிருந்தவர், இந்த ட்வீட்டில் அதே கமிஷனரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தததுதான். அப்பதிவில், “சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும் என்பதனை வரவேற்கிறேன். நன்றி, சேலம் மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படியொரு அந்தர் பல்டியை அடிக்கக் காரணம், தலைமை விட்ட டோஸ்தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இந்தப் பதிவை பார்த்துவிட்டு பலரும் தி.மு.க. எம்.பி.யை நினைத்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர்.


Share it if you like it