பெரியார் பல்கலை.யில் சேராதீங்க: யு.ஜி.சி. ‘வார்னிங்’!

பெரியார் பல்கலை.யில் சேராதீங்க: யு.ஜி.சி. ‘வார்னிங்’!

Share it if you like it

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெகுலர் வகுப்புகள் மட்டுமின்றி தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யு.ஜி.சி. எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காரணம், பெரியார் பல்கலைக்கழகம் மேற்கண்ட கல்வி முறைக்கு முன் அனுமதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக, நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும், தாங்கள் நடத்தும் கல்வி முறைகள் மற்றும் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யு.ஜி.சி.யிடம் அனுமதி பெற வேண்டும். அப்போதுதான், மேற்கண்ட கல்வி முறையும், படிப்புகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களும் யு.ஜி.சி.யிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்தி வருகின்றன. எனினும், சில பல்கலைக்கழகங்கள் முன் அனுமதி பெறாமலேயே நடத்தி விட்டு, அனுமதிக்கு விண்ணப்பிப்பதும் உண்டு. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ண்பங்களை யு.ஜி.சி. நிராகரிப்பதோடு, அதுபோன்ற பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யு.ஜி.சி.யின் முன் அனுமதி பெறாமலேயே தொலைதூரக் கல்வியை நடத்தி வந்தது கண்டறிப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் யாரும் சேர வேண்டாம் என்றும், மீறி படித்தால் அந்த டிகிரி செல்லாது என்றும் யு.ஜி.சி. தரப்பிலிருந்து மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல, தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் யு.ஜி.சி.யின் முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வியை நடத்தி வருவது யு.ஜி.சி.யால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்று யு.ஜி.சி. எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக, யு.ஜி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்விக்கு யு.ஜி.சி.யிடம் அனுமதி பெறவில்லை. ஆகவே, இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளில் யாரும் சேர வேண்டாம்” என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


Share it if you like it