தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலால் வி.ஏ.ஓ. வெட்டிக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சேலத்தில் வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ், ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த லூர்து பிரான்சிஸை, மணல் கடத்தல் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இதேபோன்றதொரு கொலை முயற்சி சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மானத்தாள் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருபவர் வினோத்குமார். இவர், கடந்த 18-ம் தேதி அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்துராஜ் என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்திச் சென்றிருக்கிறார். இதை கவனித்த வி.ஏ.ஓ. வினோத்குமார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து கனிமவளத்துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர், இரு வாகனமும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபப்ட்டது. மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துராஜ், விஜி ஆகியோர் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வி.ஏ.ஓ. வினோத்குமார் நேற்று தனது அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது வழிமறித்த முத்துராஜ், அவரை தாக்கி செல்போனை பறித்ததோடு, மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் வெட்டி இருக்கிறார். எனினும், அவரிடமிருந்து தப்பித்த வினோத்குமார், டூவீலர் மூலம் தொளசம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் தஞ்சமடைந்தார். மேலும், மணல் கடத்தல்காரர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் புகார் அளித்தார். மணல் மாஃபியாக்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.