விளையாட்டு மைதானத்தில் விதியை மீறி தி.மு.க. விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதோடு, கட்சிக் கொடிகளும் கட்டப்பட்ட சம்பவம் சேலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகில இந்திய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த விளையாட்டுப் போட்டி மைதானத்துக்குள்தான், தி.மு.க. சார்பில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதோடு, கட்சி கொடியும் கட்டி இருக்கிறார்கள். குறிப்பாக, உள் விளையாட்டரங்கிலும் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருப்பதால் விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், “விளையாட்டு மைானத்தில் அரசியல் கட்சி சார்பில் போட்டிகள் நடப்பது வழக்கம்தான். ஆனால், அப்போட்டிகளின்போது கட்சிக் கூட்டங்களைப்போல் பேனர்கள் வைத்ததில்லை. தற்போது தி.மு.க. இப்படியொரு புதிய கலாசாரத்தை புகுத்துகிறது. இதைப் பார்த்து பிற கட்சியினரும் பேனர் வைக்கத் தொடங்கினால் எங்களுக்குத்தான் தொல்லை. ஆகவே, இதுபோன்ற செயல்களை ஆரம்பத்திலேயே தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறுகையில், “தி.மு.க. சார்பில் விளையாட்டுப் போட்டியை நடத்த எங்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. அதேசமயம், மைதானத்தின் உள்ளரங்கில் கட்சிக் கொடி கட்டவோ, கட்சி தொடர்பான பேனர் வைக்கவோ அனுமதி இல்லை. இது விதி மீறிய செயல்தான்” என்றார். விதிமீறிய செயல்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பது தி.மு.க.தான் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.