பிரபல ஆங்கில ஊடகத்தின் நெறியாளர் ஆனந்த் நரசிம்மன், தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சரவணணிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க, பதில் சொல்ல முடியாமல் அவர் கதறிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரியலூர் மாணவி லாவண்யா, மதம் மாற மறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பா.ஜ.க., வி.ஹெச்.பி., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. தவிர, மாணவி லாவண்யாவின் மரணம் தொடர்பாக வடமாநில ஊடகங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதில், தி.மு.க. சார்பில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது சரவணன் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த நெறியாளர் ராகுல் சிவசங்கர், ஒரு உயிர் பறிபோயிருக்கிறது, சிரிக்காதீங்க சரவணன் என்று கண்டித்தார். இதனால் மூக்குடைபட்டு திரும்பினார் சரவணன். இந்த நிலையில்தான், மற்றொரு ஆங்கில தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர் சரவணனை கதறவிட்டிருக்கிறார்.
அதாவது, பிரபல ஆங்கில ஊடகமான நியூஸ் 18 ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணனே கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், அத்தொலைக்காட்சியின் நெறியாளர் ஆனந்த் நரசிம்மன், மாணவி லாவண்யாவின் மரணத்தில் நடந்த சில சம்பவங்களை புட்டுப்புட்டு வைத்ததோடு, மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சரவணன், எல்லாம் பொய், பொய் என்று கதறினார். இப்படி சரவணனை நெறியாளர் ஆனந்த் நரசிம்மன் கதறவிட்ட காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும் மக்கள், சரவணனுக்கு இது போறாத காலம்போல என்று கிண்டல் செய்கிறார்கள். அக்காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.