சர்தார் வேதரத்தினம் பிள்ளை
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சாதாரண உப்புக்கு ஆங்கிலேயர் வரி விதித்தனர். இதனை எதிர்த்து காந்தியடிகள் 1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து தமது தொண்டர் படையுடன் “தண்டி” என்ற இடத்தில் உப்பை அள்ள தனது பயணத்தை மேற்கொண்டார்.
வடக்கே காந்தியடிகள் நிகழ்த்திய ”தண்டி யாத்திரை’ யைப் போலவே, தமிழ்நாட்டிலும் “உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்” நடத்தும் பொறுப்பை ராஜாஜி ஏற்றார். பல உப்பளங்களுக்கு உரிமையாளரான சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களே, இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
வேதரத்தினம் பிள்ளையின் மனம் ஆன்மீகத்திலும், தேசியத்திலும் ஈடுபடத் தொடங்கியது. தாயுமானவர் பாடல்கள், இராமாயணம், பகவத்கீதை, திருக்குறள் இவைகளை ஆழ்ந்து படித்தார். காந்தியடிகளின் நூல்களே இவரைத் தேசப் பணியில் ஈடுபடத் தூண்டியவை.
ஒரு சமயம் பம்பாய்க்குச் சென்றவர், அச்சமயம் மகாத்மா காந்தியடிகளின் பிரசங்கங்களைக் கேட்ட பின்னர், அவரது சுதேசி இயக்கத்தினால் உந்தப்பட்ட இளம் வாலிபரான வேதரத்தினம் பிள்ளையின் மனதிலும், சுதந்திரம், சுதேசியம் இவையிரண்டும் ஆழமாகவே ரூன்றின.
மீண்டும் வேதாரண்யத்திற்கே திரும்பிய அவரது மனம், நாடு சுதந்திரம் பெற காந்திய வழியையே பெரிதும் விரும்பியது. இதனால் வேதரத்தினம் பிள்ளை ‘காந்திஜியே என் தூதுவர்! தேசமே எனது சுகமும் துக்கமுமாகும்!’ என்ற தத்துவ அடிப்படையிலேயே வேதாரண்யத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கைகள் பரவவும், அதனால் மக்கள் விழிப்பு அடையவும் பெரிதும் விரும்பினார்; தீவிர பிரச்சாரங்களில் இடைவிடாமல் பாடுபட்டார். வேதாரண்யத்தைத் தவிர தமிழகத்தில் பல இடங்களில் இவரது மேடைப் பிரசங்கங்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து எதிர்ப்புக் குரலைத் தெரிவித்தன.
தேசவிடுதலைச்கான போராட்டங்களில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை நான்கு முறை சிறை தண்டனையை ஏற்றார். சிறையில் தன்னுடைய சக கைதிகளுக்கு ஆன்மீக விஷயங்களோடு, தேசியத்தைப் பற்றியும் மிக்க எளிய முறையில் பிரசங்கங்களைச் செய்ததினால், அரசியல் கைதிகளோடு சாதாரணக் கைதிகளும் நாட்டுப் பற்றில் வெகு தீவிரம் அடைந்தனர்.
“வெள்ளையனே வெளியேறு!” போராட்டத்தில் மகாத்மா காந்திஜியும், அவரது துணைவியார் கஸ்தூரிபா காந்திஜியும் சிறையில் அடைக்கப் பட்டனர், பின்னர் கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அன்னையின் நினைவைப் போற்றும் வகையில், சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1946-ஆம் ஆண்டு பிப்ரவரியில் “கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம்” ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குருகுலத்திலிருந்து கஸ்தூரிபா ஆதாரப் பள்ளியும் தொடங்கப் பட்டது.
- பாபு