களமிறங்கிய சாவர்க்கர் பேரன்… ராகுலுக்கு காத்திருக்கும் ‘ஷாக்’!

களமிறங்கிய சாவர்க்கர் பேரன்… ராகுலுக்கு காத்திருக்கும் ‘ஷாக்’!

Share it if you like it

சாவர்க்கர் பற்றி பேசியதற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வேன் என்று வீர சாவர்க்கரின் பேரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் குற்றவாளியானார் ராகுல் காந்தி. இதனால், அவரது எம்.பி. பதவி பறிபோனது. இந்த சூழலில், மோடி சமூகம் பற்றி பேசியதற்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராகுலோ, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. ஆகவே, மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராகுல் தொடர்ந்து சாவர்க்கரை இழிவுபடுத்தி வருகிறார். இதேபோல தொடர்ந்து அவர் பேசினால் பொதுவெளியில் அவர் நடமாட சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதேபோல, இதுவரை ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவரான சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று எச்சரித்தார். அதேபோல, சஞ்சய் ராவத்தும், சாவர்க்கரை இழிவுபடுத்துவதை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

இந்த நிலையில்தான், சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், சாவர்க்கர் பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித் சாவர்க்கர், “உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர் தனிப்பட்ட முறையில் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் அவர்கள் வலியுறுத்த வேண்டும். மேலும், உங்களின் கடவுளை அவமதிப்பவருடன் நீங்கள் இருக்கக் கூடாது என்பது பொதுவான ஒன்று. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான வார்த்தைகளை பேசியது. அப்போதே, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் வழக்கும் பதிவு செய்திருக்கிறேன். எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வேன்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆக, ராகுலுக்கு சிக்கல் மேல் சிக்கலாக வந்து கொண்டிருக்கிறது.


Share it if you like it