சீமான் என்ற இந்தியர். திரைப்பட நடிகர் இயக்குனர். இன்று வரை குடும்ப அட்டை ஆதார் வாக்காளர் அட்டை கடவுச்சீட்டு என்ற அத்தனையும் இந்திய அடையாளத்தில் கொண்டிருப்பவர். இந்தியாவில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவர். இன்று இவரின் முன் பெரும் எதிர்மறை விமர்சனங்களும் கண்டனங்களும் வழக்குகளும் வரிசை கட்ட தயாராகி வருகிறது. காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட சாராரை மனம் புண்படும்படி விமர்சித்து விட்டார் அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு.
இதே சீமான் இந்திய குடியுரிமையோடு வாழ்ந்து கொண்டே அதே இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மலிவான விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் வைத்த போது யாரும் கண்டிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி என்று தமிழர்களுக்காக கட்சி வைத்துக் கொண்டு எந்நேரமும் தனி தமிழ்நாடு இலங்கைத் தமிழர் தனித்தமிழ் ஈழம் என்று பேசும்போது யாரும் ஏன் என்று கேள்வி கேட்கவில்லை. யார் தமிழர் ? யார் தமிழர் அல்லாதவர் ? என்று பட்டியல் போட்ட போது இந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? என்ற எதிர்ப்பு குரல் இல்லை.
இந்திய திருநாட்டில் கட்சி – அரசியல் செய்து இங்கு உள்ள மக்களை வாக்குகளை வைத்து தேர்தல் களத்தில் களம் காணும் ஒரு கட்சி. தனது ஒவ்வொரு அசைவிலும் நிகழ்விலும் இந்த தேசத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததை தடுக்கவில்லை.அந்த அமைப்பின் தலைவர் அவரது பெயர் அவர்களது அதிகாரப்பூர்வ வரைபடம் என்று அத்தனையும் தங்களது அடையாளமாக பயன்படுத்தும் போது இது தேசவிரோதம் என்று கண்டிக்க ஆளில்லை. இந்த நாட்டின் பிரதமரை கொடூரமாக கொன்றவர்களை நாயகர்களாக போற்றி பேசிய போது அவரை யாரும் விரோதியாக பார்க்க வில்லை. அதே குற்றவாளிகளின் விடுதலைக்காக போராட்டம் செய்த போதும் அவர்களின் விடுதலையை வெற்றி திருவிழா கொண்டாடிய போதும் அவரின் தேசியம் சார்ந்த விமர்சனங்கள் எங்கிருந்தும் எழவில்லை.
பல கோடி மக்களின் விருப்ப கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்தை கெட்டிக்கார தம்பிகள் என்ற புகழ்ந்த போது கருத்து சுதந்திரம் என்ற வக்காலத்து வாங்கிய போது அவரின் பாரபட்சத்தை இந்து விரோதத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு பெண் நடிகை தன்னை ஆசை காட்டி மோசம் செய்து விட்டார் தன்னிடம் இருந்து பணம் நகை என்று அபகரித்து விட்டார் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று தொடர்ச்சியான காணொளிகள் வெளியிட்ட குற்றச்சாட்டு வைத்த போது இது என்ன இந்த விஷயத்தில் உன் பதில் என்ன என்று அவரை நோக்கி ஒரு ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.
தமிழர்களுக்கான உரிமையை அரசு அதிகாரத்தை மீட்கும் கட்சி என்ற பெயரில் மாநாடு நடத்தும் போது காஷ்மீரில் பிரிவினை வாதத்தையும் தீவிரவாதத்தையும் முன்னெடுக்கும் யாசின் மாலிக் என்ற கொடூர பயங்கரவாதியை சிறப்பு அழைப்பாளராக கொண்டு வந்து மேடையில் அமர்த்தி பாரதத்தை பாரத தேவி என்று சங்கிகள் குறிப்பிடுகிறார்கள். அப்படி பார்த்தால் காஷ்மீர் தலை தமிழகம் கால் பகுதி தம்பி யாசின் மாலிக் நீ தலையில் இருந்து அடி. நான் காலில் இருந்து கடித்து குதறுகிறேன். இரண்டு பேரும் சேர்த்து இந்தியாவை துண்டாடி விடலாம் . என்று மேடையில் கொக்கரித்த போது இது தேச விரோதம் – தேச துரோகம் என்று எந்த பக்கத்தில் இருந்தும் கண்டனம் வரவில்லை.
ராமஜென்ம பூமி தொடங்கி காசி மீண்டெழுந்தது எழுவது வரை இராமேஸ்வரம் தொடங்கி மதுரா வரையில் ஒவ்வொரு நகர்விலும் இந்து விரோதத்தை மட்டுமே பேசுவதும் நடுநிலை காக்கும் மத்திய அரசை ஒரு சார்பான மதவாத அரசியல் என்று வன்மம் கக்கிய போதும் இது உண்மையல்ல என்று அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க கூட இங்கு யாருக்கும் நேரமில்லை. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் வேளாண் பாதுகாப்பு சட்ட திருத்தம் வரை அத்தனை விஷயத்திலும் விஷம பிரச்சாரம் செய்தல் எதிர்க்கட்சி அரசியல் என்ற பெயரில் தேசத்தை அவமதித்த போது தேசிய இறையாண்மை பற்றி அவருக்கு பாடம் நடத்த இங்கு யாருமில்லை.
பிறப்பால் பிராமணர் சுத்தமான சைவ உணவு பழக்கம் மட்டுமே கொண்டவர் ஆடிட்டர் படிப்பு அரசியல் என்று நவீனமாக வாழ்ந்தால் கூட இன்றளவும் தனது ஆச்சார அனுஷ்டானங்களை முழுவதுமாக கடைபிடிக்கும் ஒரு பிராமணர் என்ற குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வு கூட இல்லாமல் பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவரான ஹரிஹரன் ராஜா அவர்களை பார்த்து, என் மனைவி அருமையாக மாட்டு கறி சமைப்பாள் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வாங்க என்று அழைப்பு விடுத்த போது அவரின் மனம் என்ன பாடுபட்டு இருக்கும்? . பசுவை தாயாக வணங்கி தெய்வமாக வழிபடும் வசுதைவ குடும்பம் என்னும் சித்தாந்தத்தின் வழியில் வாழ்பவரை மாட்டுக்கறி சாப்பிட என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பது தான் விருந்தோம்பலா? இது தான் தமிழர் பண்பாடா? இதுதான் உனது அரசியல் மாண்பா ? என்று குறைந்தபட்ச கண்டனத்தை கூட சீமானை பார்த்து கேட்பதற்கோ பேசுவதற்கோ இங்கு நாதியில்லை .இது அப்பட்டமான இந்து விரோதம் – வெளிப்படையான பிராமண துவேசம் இதை செய்வது ஒரு அரசியல்வாதிக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல என்று விவாதம் செய்வதற்கு ஊடகங்களுக்கு துணிவில்லை.
இந்துக்களின் தெய்வங்கள் முதல் புராணங்கள் – இதிகாசங்கள் வரை அவர்களின் திருவிழா உற்சவங்கள் தொடங்கி வழிபாட்டு முறைகள் வரை அத்தனையையும் கேலிக்கூத்தாக்கி விமர்சனம் செய்த போது அவர்களின் மனம் என்ன பாடுபட்டு இருக்கும். ? இதையெல்லாம் செய்பவர்களை ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பேசி ஆதரித்த போது பாவப்பட்ட இந்துக்களின் மனம் எப்படி புழுங்கி இருக்கும் ? என்று யோசிக்கவும் ஆள் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு தகாது என்று கேட்கவும் இங்கு நாதி இல்லை.
ஆனால் இன்று சமீபமாக ஒரு குறிப்பிட்ட சாராரை சாத்தானின் பிள்ளைகள் அவர்கள் தான் இங்கு எல்லா சீரழிவுக்கும் காரணம் என்று பேசியதற்கு நேரடியாகவும் மறைமுகமானவும் கண்டனங்கள் குவிகிறது. அவரின் பலவீனம் என்ன என்பதை அறிந்து அவரைத் தேடிப் பிடித்து காணொளி வெளியிட வைத்து புகார் கொடுக்க வைத்து அவரை மீதான வழக்குகள் தீசு தட்டப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடப்படுகிறது. கட்சி அரசியல் ஊடகங்கள் என்று அனைத்து தரப்பிலும் இது ஒரு சாராரை புண்படுத்தும் வன்மம் என்று விவாதங்கள் எழுகிறது .
நான் பேசியது இந்த அர்த்தத்தில் தான் இதை தவறாக புரிந்து கொண்டு அதை அரசியலாக வேண்டாம் என்று அவர் ஒரு விளக்கம் கொடுத்த பிறகு கூட அதை புறந்தள்ளி தொடர்ந்து அவர் ஒரு குறிப்பிட்ட சாராரை அவமதித்ததாக கச்சை கட்டி நிற்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர் பேசியது தவறு என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட சாராரின் மனம் புண்படும் என்றால் அதற்காக இத்தனை கண்டனங்கள் விமர்சனங்கள் அவர் முன் வருவது ஜனநாயகம் நியாயம் என்றால் இந்த நியாயமும் ஜனநாயகமும் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் தர்மத்தின் வழியில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு இதுவரையில் இல்லாமல் போனது ஏன்? . அதை இல்லாமல் செய்தது யார் ? .எதற்காக என்ற கேள்வி இங்குள்ள ஒவ்வொரு பாவப்பட்ட பெரும்பான்மையின் மனதையும் உலுக்குகிறது.
அனைவருக்கும் சமநீதி சேர்ப்பது தான் சட்டம் என்றால் அந்த சட்டம் பெரும்பான்மை மக்களை பாதுகாக்க தவறியது ஏன் என்ற ஆதங்கம் எழுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் யாவருக்கும் பொது என்றால் இன்று அவர் ஒரு சாரார் பற்றிய பேச்சை விமர்சனத்தை ஏன் கருத்து சுதந்திரமாக கடந்து போக முடியவில்லை என்ற நெருடல் வருகிறது. அப்படியானால் இந்திய விரோதம் பேசுபவர்களுக்கு ஜனநாயகம் கருத்து சுதந்திரம் பொருந்தும். ஆனால் அந்நிய மதங்களையோ அதன் சார்ந்த சித்தாந்தங்களை விஷயங்களை விமர்சனம் செய்யும் போது அந்த ஜனநாயகம் கருத்து சுதந்திரம் பொருந்தாது. அது மக்களின் மனங்களை நம்பிக்கைகளை புண்படுத்தும் செயல் அதனால் சட்டம் தன் கடமையை செய்கிறது . அவ்வகையில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது இந்தியா மட்டும் தான். அதுவும் பெயரளவில் தான் இன்னமும் இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமும் சுதந்திரமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது கிடைத்தது அவர்களுக்கு இன்னமும் போய் சேரவில்லை என்பதே நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சொல்லும் கசப்பான உண்மையா? .