ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியை அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈ.வெ.ரா – 46. இவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர். கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து, ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தன.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் தென்னரசு களம் காண்கிறார். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நிற்கிறார். இந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து, அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது, அருந்ததியர் குடியிருப்பு பகுதிக்கு அவர்கள் சென்றனர். இதற்கு, அந்த பகுதி மக்கள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.