தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் எனக்கும் செல்ல சண்டை தான் நடந்து வருகிறது என சீமான் பேசியிருப்பது தமிழ் தேசியவாதிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தமிழ் தேசியம் பேசுவதை தனது கொள்கையாக கொண்டவர். அந்த வகையில், இன்று வரை அரசியல் களத்தில் பயணித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழ் தேசிய உணர்வு கொண்ட மக்கள் சீமானை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். எனினும், இவரது பேச்சும் செயல்பாடுகளும் தொடர்ந்து முரண்பட்டவையாகவே இருந்து வருகிறது. இந்தியா எனது நாடு அல்ல என்று கூறுவார். அதேசமயம், தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவார். தி.மு.க. எனது எதிரி என்று கூறுவார். அதன்பிறகு தி.மு.க. எனது தோழமை கட்சி என்று பேசுவார். இப்படியாக, இவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த அரசியல் நிபுணர்கள் தி.மு.க.வின் B team-மாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகளை மாற்று கட்சிகளுக்கு செல்ல விடமால் சிதறடிப்பதே இவரது கட்சியின் பணி என்று கூறிவருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிரபல அரசியல் விமர்சகர் ஜே.சி.வி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் சீமானுக்கு, 2024 -ல் வாக்களிப்பது என்பது உங்கள் வாக்கை விணடிப்பது என்றுதான் பொருள். அவருக்கு, ஒரு எம்.பி. கூட கிடைக்காது. அவர், நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் நிலையில் இல்லை. 2024-ல் மீண்டும் மோடி தான் பிரதமர் என்பது உறுதி அதுதான் தமிழகத்துக்கு நன்மை என குறிப்பிட்டுள்ளார் என்பதே சிறந்த உதாரணம்.
இப்படிப்பட்ட சூழலில் தான், ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சீமான் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
முதல்வர் மீது இருப்பது செல்லக் கோவம் தான். தி.மு.க.வில் பலரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்களுடன் எந்தப் பகையும் கிடையாது. முதல்வரையே என் அண்ணன் போலத்தான் நினைக்கிறேன். நான் அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பிச் சண்டைதான். அவரின் மீதிருப்பது செல்லக் கோபம்தான் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியம் தற்போது திராவிட மாடல் மீது திடீர் பாசமழையை பொழிய வேண்டிய அவசியம் என்ன? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். NTK – நாம் தமிழர் கட்சியை இனி, NDK – நாம் திராவிடர் கட்சி என்று பெயர் மாற்றி விட வேண்டியது மட்டும்தான் பாக்கி என இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.