ஈரோடு சென்னிமலையை கைப்பற்ற துடிக்கும் அந்நிய மதம் சார்ந்த அமைப்புகள் –  கொந்தளிக்கும் சென்னிமலை பக்தர்கள்.

ஈரோடு சென்னிமலையை கைப்பற்ற துடிக்கும் அந்நிய மதம் சார்ந்த அமைப்புகள் – கொந்தளிக்கும் சென்னிமலை பக்தர்கள்.

Share it if you like it

கொங்கு மண்டலத்தில் பக்திக்கு முதலிடம் உண்டு . ஆன்மீக ஈடுபாடும் அதன் பாரம்பரியமான கலாச்சார வாழ்வியலும் கொங்கு மண்டல மக்களுக்கு பிரிக்க முடியாதது . அதிலும் குறிப்பாக முருக பக்தி என்பது அம்மக்களின் உயிரோடு கலந்த உணர்வு . கோவை மலையடிவாரத்தில் கட்டமைக்கப்பட்ட மருதமலையும் ஈரோடு சென்னிமலை முருகனும் சிவன்மலை ஆண்டவரும் அவர்கள் பரம்பரை பக்தியின் அடையாளம். குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனுக்கு எப்போதும் கொங்கு மண்டலத்தில் தனி பக்தியும் பாசமும் உண்டு. கொங்கு மண்டலத்தில் குடி கொண்டுள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பாதயாத்திரையாக போவதும் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுதோறும் ஆன்மீக யாத்திரை போவதும் கொங்கு மண்டல மக்களின் பக்தி திருவிழா .

குறிப்பாக குறமகள் வள்ளியை தங்களின் குலமகளாகவே கருதுபவர்கள் கொங்கு மக்கள் . அந்த கொங்கு மண்டலத்தில் தான் பூர்வீக கந்தபுராணம் அது தொடர்பான நிகழ்வுகள் நிறைவேறியதாக அவர்கள் இன்றளவும் நம்புகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்கள் முருகப்பெருமானை தங்களது வீட்டு மாப்பிள்ளையாகவே மரியாதை செய்வார்கள். வழிபடும் கடவுள் என்பதை கடந்து தங்கள் குலத்தின் குலமகள் தங்கள் குடும்பத்தின் மருமகன் என்ற வகையில் ஆண்டுதோறும் முருகன் வள்ளி திருமணத்தின் போது பங்காக வள்ளியம்மைக்கு தாய் வீட்டு சீராகவும் முருகனுக்கு மாமியார் வீட்டு சீராகவும் அவரவர் வசதிக்கேற்ப சீர்வரிசைகளை குவித்து தங்களின் ஆன்மீக பக்தியையும் கலாச்சார வாழ்வையும் கொங்கு மக்கள் நிரூபிப்பார்கள்.

வள்ளியம்மை கும்மி குறவள்ளி கும்மி மங்கை வள்ளி கும்மி என்று பல்வேறு பெயர்களில் கொங்கு மக்களின் பாரம்பரியமான கும்மி ஆட்டங்கள் இன்றளவும் பிரசித்தி பெற்றது. பண்டிகை கொண்டாட்டங்கள் ஆலயத்தின் விழாக்கள் உற்சவங்கள் திருவிழாக்கள் கடந்து தற்போது பொதுமக்கள் அதிகம் கூடும் அரசியல் நிகழ்வுகளில் கூட கொங்கு மக்களின் இந்த பாரம்பரிய கொண்டாட்டங்கள் களை கட்டும். அந்த வகையில் ஆன்மீக வழிபாடுகள் பாரம்பரிய முன்னெடுப்புகள் கலாச்சார அடையாளங்களை எப்போதும் கொங்கு மக்கள் மதித்து பின்பற்றி நடப்பவர்கள். அதற்கு குந்தகம் விளைவிப்பதையோ அவமதிப்பதையோ அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் கடந்த காலங்களில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த போது சாதி கடந்து ஒட்டுமொத்தமாக ஆன்மீக எழுச்சியாக வேல் யாத்திரைக்கு பெரும் ஆதரவும் பங்களிப்பும் கொங்கு மண்டல மக்கள் வழங்கினார்கள். கட்சி அரசியல் சாதி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களின் ஆன்மீக உணர்வுகள் ஆழமானவை . அதில் அவர்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. ஆனால் தொடர்ச்சியாக அரசியல் வன்மத்தோடு குறி வைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் இம்முறை ஈரோடு சென்னிமலை முருகன் கோவிலை குறி வைத்து சில அமைப்புகள் களம் இறங்கி இருப்பது நம் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

சென்னிமலை ஆண்டவர் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் என்றாலும் அது சைவம் கௌமாரகம் சக்தி வழிபாடு வைணவம் என்று அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரு ஆன்மீக தலமாகவே விளங்குகிறது . கொங்கு மண்டல மக்களுக்கு சாதி மற்றும் வழிபாட்டு முறைகள் பாகுபாடின்றி ஒரு பொதுவான ஆன்மீக வழிபாட்டுத் தலமாக தான் சென்னிமலை இன்றளவும் திகழ்கிறது. அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சென்னிமலை முருகன் தான் பிரதான தெய்வம். பல குடும்பங்களுக்கும் அவர் குலதெய்வம். அவ்வகையில் நம் மக்களின் வழி வழியான பங்களிப்பும் ஆன்மீக முன்னெடுப்புகளும் ஈரோடு சென்னிமலை முருகன் ஆலயத்தின் ஆண்டு விழாக்களையும் உற்சவங்களையும் விமரிசையாக்கும்.

ஈரோடு பகுதியில் ஆன்மீக அடையாளமாக இருக்கும் சென்னிமலை பகுதியை கல்வாரி மலையாக அறிவிக்கப் போவதாகவும் அதை தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க இருப்பதாகவும் சில அந்நிய மதம் சார்ந்த அமைப்புகள் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலான விவாதங்கள் கலந்தாய்வுகள் என்ற பெயரில் அவர்கள் மேடை போட்டு பேசியதும் விவாதித்து இருப்பதும் கொங்கு மக்களை கொதிப்பில் நிறுத்தி இருக்கிறது. இதுவரையில் இந்நிகழ்வை அரசு சார்பில் கண்டித்ததாகவோ எச்சரித்ததாகவோ செய்திகள் இல்லை. அதே நேரத்தில் மட அதிபதிகள் ஆன்மீக அமைப்புகள் என்றும் யாரும் அவர்களை கண்டித்ததாகவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் செய்திகள் இல்லை.

ஆங்காங்கே சென்னிமலை பக்தர்கள் சென்னிமலை குலதெய்வமாக வழிபடும் சுற்று வட்டார கிராம மக்கள் உள்ளூர் இந்து அமைப்புகள் ஆன்மீகவாதிகள் தேசியவாதிகள் என்று பல தரப்பினரும் தன் எழுச்சியாக சென்னி மலையை காக்க வேண்டும் என்று களம் இறங்குகிறார்கள். சென்னிமலை அதன் ஆன்மீகம் பண்பாடு பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்நிய மதம் சார்ந்த அமைப்புகள் அது சார்ந்த தனி நபர்கள் யாரும் அதில் ஆதிக்கம் செலுத்தவோ அபகரிக்கவும் அனுமதிக்க கூடாது. இதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மாவட்டம் மாநில நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 13-ஆம் தேதி சென்னிமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு என்று கட்டமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதன் அமைச்சர் அவரை வழிநடத்தும் மாநில அரசு என்று அத்தனை தரப்பும் சொல்லி வைத்தார் போல் இதுவரையில் இந்த விவகாரத்தில் காக்கும் கள்ள மவுனம் அந்நிய மதம் சார்ந்த அமைப்புக்களின் ஆதரவு மனநிலையில் சாட்சியமாகவே கருதப்படுகிறது . அதன் காரணமாக அந்நிய மதம் சார்ந்த அமைப்புகள் அதன் பின்னணியில் இருக்கும் அரசு எந்திர ஆதரவு என்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பெரும் நெருக்கடிகளை கடந்து தங்களின் பாரம்பரியமான சென்னிமலை முருகன் கோவிலை அதன் ஆன்மீக அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் சவாலுக்கு கொங்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

பொதுவாக கொங்கு மக்கள் இயல்பில் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். அவர்களுக்கு உழைப்பு முயற்சி அன்பு உள்ளிட்ட ஆக்கபூர்வமான வழிகள் மட்டுமே பரீட்சயம் . அதை கடந்து ஆக்கிரமிக்கும் மனநிலை அபகரிக்கும் போக்கு வன்முறை உள்ளிட்ட விஷயங்களுக்கு அவர்கள் எப்போதும் இடம் தருவதில்லை. அதே நேரத்தில் தங்களின் தன்மானம் சுய கௌரவம் என்று வரும்போது அதை தற்காத்துக் கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் போகக்கூடியவர்கள். அதை கடந்த காலங்களில் கோவையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் நிரூபித்திருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் மத பயங்கரவாதம் அதன் பின்னிருக்கும் வாக்கு வங்கி அரசியல் காரணமாக எண்ணற்ற இழப்புகளையும் உயிர் சேதங்களையும் கடந்து வந்த கொங்கு மக்கள் சமீப காலமாகத்தான் அதன் இழப்பிலிருந்து வெளிவந்து தங்களின் இயல்பு மனநிலையில் வாழ்கிறார்கள். அதை சீர்குலைக்கும் விதமாக மீண்டும் ஒரு மத துவேஷத்தை அவர்கள் எதிர்கொள்வது அவர்களின் மனதில் ஆட்சியாளர்களின் வாக்கு வங்கி அரசியலும் அதன் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் மத துவேஷமும் ஆறாத ரணமாகி இருக்கிறது.

ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் ஆளும் கட்சி அரசு எந்திரம் முதல்வர் அறநிலையத்துறை அமைச்சர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து சென்னிமலை முருகன் கோவிலுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் அபாயத்தை தடுத்து நிறுத்தி நம் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கி இருக்க வேண்டும். இதை செய்ய வேண்டிய மாநில அரசு அவர்களின் தற்காப்பு சுய பாதுகாப்பு விவகாரத்தில் மூழ்கி கிடக்கிறது . இந்து அறநிலையத்துறை அமைச்சரோ சனாதன ஒழிப்பு மாநாடு ஒருபுறம் மறுபுறம் சனாதன வழியில் தன் சொந்த திருமண சடங்குகள் மறுபுறம் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறார். இரண்டுக்கும் இடையில் அரசு எந்திரத்தில் அலட்சியம் ஆட்சியாளர்களின் புறக்கணிப்பு காரணமாக தனித்து விடப்பட்டிருக்கும் கொங்கு மக்கள் தங்களுக்கான அடையாளத்தை தாங்களே மீட்டெடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் தன் எழுச்சியாக களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட சார்பில் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றி கிடைத்தது . அது ஆளும் தரப்பை அதிர வைத்தது. இன்று வரை பல்வேறு விவகாரங்களில் அது வெளிப்படுவதாக ஏற்கனவே கொங்கு மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு உண்டு . இப்படிப்பட்ட சூழலில் அங்கு மத ரீதியாக எழும் ஒரு விவகாரத்தை ஆரம்பத்திலேயே சட்டப்படி அணுகி சிக்கல் எழும்பும் முன் நிவர்த்தி செய்ய செய்ய வேண்டியது ஒரு பொறுப்பான மாநில அரசின் முதல் கடமை. ஆனால் அதை செய்ய வேண்டியவர்கள் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதே தெரியாதது போல் அமைதியாக கடந்து போவது கொங்கு மக்களின் குற்றச்சாட்டும் அதன் பின்னிருக்கும் வாக்கு வங்கி அரசியலும் உண்மை என்ற கருத்தையே நிலைநிறுத்தும். அது எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் சார்ந்த அரசியலுக்கும் கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியான பின்னடைவையும் பலத்த எதிர்ப்பையும் கொடுக்கும் .ஆனால் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

சிறுபான்மை மக்களின் ஆதரவால் தான் எங்களின் கட்சி வெற்றி பெற்றது . சிறுபான்மை மக்களின் வாக்குபிச்சையில் தான் இந்த ஆட்சியே நடக்கிறது என்று மேடைக்கு மேடை பெருமை பேசுபவர்களிடம் அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பற்றியே நியாயம் கேட்க முடியாத துரதிருஷ்ட நிலை .அப்படி இருக்க ஒட்டுமொத்தமாக தங்களுக்கு எதிராக வாக்களித்த கொங்கு மக்களையும் தங்களுக்கு சற்றும் ஒவ்வாத சனாதன அடையாளமான சென்னிமலை முருகர் கோவிலையும் பாதுகாக்கவும் அதை அம்மக்களின் ஆன்மீக உரிமையாக நிலைநாட்டவும் முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் முயற்சி என்று உணர்ந்து கொண்ட கொங்குமக்கள் தங்களின் அடையாளத்தை தாமாகவே மீட்க வேண்டும் என்ற முனைப்போடு ஜனநாயக ரீதியில் அவர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் முன்னெடுக்க தயாராகிறார்கள். சென்னிமலை ஆண்டவரின் துணையோடு பாரதத்தின் ஆட்சியாளர்களின் பக்க பலத்தோடும் கொங்குமக்கள் தங்களின் சென்னிமலை கோவிலும் ஆன்மீக அடையாளங்களையும் பத்திரமாக மீட்டெடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள ஒவ்வொரு ஆன்மீகவாதியின் வேண்டுகோள்.


Share it if you like it