ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி கைது: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி கைது: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்றும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும், அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “கடந்த 14-ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட உடனேயே, அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை. ஆகவே, செந்தில்பாலாஜி கைது சட்ட விரோதமானது. இதனை கருத்தில் கொள்ளாமலேயே நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அமலாக்கத்துறையை காவல்துறையினராக கருத முடியாது என்பதால், அமைச்சரை காவலில் எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை” என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருப்பதால், செந்தில்பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணமாகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம். அதேசமயம், கைது செய்யும்போது அதற்கான காரணங்களை கூற வேண்டியதில்லை. கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம். அதோடு, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில்பாலாஜி பணம் பெற்றதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தவிர, செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில்தான் இருக்கிறார். அமலாக்கத் துறை காவலில் இல்லை. எனவே, அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. மேலும், நீதிமன்றக் காவலில் வைக்க ஆஜர்படுத்தும்போது, அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது. தவிர, ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


Share it if you like it