பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆகியவை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இப்படி மாணவிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறையின் உதவி பேராசிரியர் மகேந்திரன் என்பவர், மாணவியிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறதோ? என்னும் அச்சம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுகுறித்து பேச வேண்டிய பிரபல ஊடகங்கள் வழக்கம் போல கப்சிப்.
அதேபோல, தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகம் கோவையில் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகள் இக்கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மாணவிகள் இருக்கும் அறைகளின் கதவுகளை சில மர்ம நபர்கள் நள்ளிரவில் தட்டுவது, ஜன்னல் கதவுகளை திறந்து எட்டிப் பார்ப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதாக 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெரும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், தலைமை ஆசிரியராக இருப்பவர் தாமஸ் சாமுவேல். இவர்தான், தனது பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசப் படம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி, தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்கதையாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.