சிக்கிம் விபத்து: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

சிக்கிம் விபத்து: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Share it if you like it

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 அதிகாரிகள் உட்பட 16 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களுக்கு ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு எல்லை பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. குறிப்பாக, லாசென், லாசங், டாங்கு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கூடுதல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்பகுதி மிகுந்த குளிர் பேரதேசம் என்பதால், ராணுவ வீரர்கள் சுழற்சி அடிப்படையில் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சிக்கிமின் சட்டன் பகுதி ராணுவ முகாமில் இருந்து, எல்லை பகுதியான டாங்குவுக்கு நேற்று 3 வேன்களில் 60 ராணுவ வீரர்கள் புறப்பட்டனர். இது மிகவும் குறுகலான ஊசிமுனை வளைவுகள் கொண்ட மலை பகுதியாகும். இதில், 3 வேன்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. ஜெமா பகுதி வளைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வேன் நிலைதடுமாறி செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதைக் கண்ட, மற்ற 2 வேன்களில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து சென்று, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். எனினும், இந்த விபத்தில் 3 அதிகாரிகள் உட்பட 16 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து சிக்கிம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். காலை நேரத்தில் மலைப் பகுதியை வாகனம் கடந்து சென்றதால், பனிமூட்டம் காரணமாக சாலை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், காயமடைந்த ராணுவ வீரர்கள் குணமடைந்த பின்னர்தான், விபத்துக்கான முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

விபத்து குறித்து தகவலறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனது ட்விட்டர் பதிவில், “சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் இந்திய ராணுவத்தின் தீரமிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it