சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஆல்பர்ட் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் அரசு உதவிபெறும் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆல்பர்ட் ஆப்ரஹாம் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர், இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் ஆல்பர்ட் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மே மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள், காது மற்றும் வாய் பேச முடியாத சங்கத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து, மேற்படி சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் அளித்தனர். ஆனால், விசாரணை மந்தகதியில் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அச்சங்கத்தை சேர்ந்தவர்கள், விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
தகவலறிந்து போலீஸாரும், மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளும், தாசில்தார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, முன்னாள் மாணவிகள் 5 பேர் தமிழ் ஆசிரியர் ஆல்பர்ட் ஆப்ரஹாம், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர். இதையடுத்து, ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதன் பிறகு, ஆசிரியர் ஆல்பர்ட் ஆப்ரஹாம் கைது செய்யப்பட்டார். செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.