ஏற்கெனவே வேலூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டும் வீடியோ வெளியான நிலையில், தற்போது சிவகங்கையில் அரசு மருத்துவமனை நர்ஸ் ஒருவரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதும், கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை அதிகரிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல, தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அராஜகத்தில் ஈடுபடுவதும் வாடிக்கை. அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றதிலிருந்தே, அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் போலீஸார் மற்றும் அரசு ஊழியர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நிர்வாகிகளிடம் அட்ராசிட்டி சற்று தூக்கலாகவே இருக்கிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் பெண் கவுன்சிலராக இருப்பவரின் கணவர் ஒருவர், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களை பணி செய்ய விடாமலும் தடுத்தார். இதை கூட்டத்திலிருந்த ஒரு துப்புரவுப் பணியாளர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய, விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அரங்கேறுவதற்குள் சிவகங்கை மாவட்டத்தில் நர்ஸ் ஒருவரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் மிரட்டும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்திருக்கிறார் சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் உலகப்பன். மருத்துவமனையில் ஊசி போடும் நேரத்தையும் தாண்டி வந்ததால், சற்று நேரம் காத்திருக்கும்படி கூறியிருக்கிறார் அங்கு பணிபுரியும் நர்ஸ் ஒருவர். உடனே, தாட் பூட் என எகிறிக் குதிக்கும் உலகப்பன், அந்த நரஸை பெண் என்றும் பாராமல் அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதோடு, ஏதோ இவர்தான் துறை அமைச்சர் போல, உன்னை கன்னியாகுமரி பக்கம் தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றி விடுவேன் என்றும் ஏகத்துக்கும் எகிறுகிறார்.
பாவம், இதைக் கேட்டு பயந்துபோன நர்ஸோ, பவ்வியமாக பதில் சொல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் செய்து விட்டார்கள். இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பொதுமக்கள் பலரும், தி.மு.க.வினரின் அட்ராசிட்டி எல்லை மீறிப் போகிறது என்று குமுறி வருகிறார்கள்.