தி.மு.க. பிரமுகர் அளித்த புகாரின் பேரில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில், மதபோதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், வெளிநாட்டு மத கலாசாரம் இதுதான் என்று கனல் கண்ணன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திலுள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பினர். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால், அங்கு வேண்டுமென்றே விசாரணை தாமதப்படுத்தி இருக்கிறார்கள்.
அதோடு, கனல் கண்ணனுக்கு மதிய உணவு வழங்காமல் அலைக்கழித்திருக்கிறார்கள். அதாவது, வேண்டுமென்றே போலீஸார் விசாரணையை அதிக நேரம் இழுத்தடித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் எஸ்.பி. அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து, போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கிடையே மாலை 6 மணிக்கு பிறகு விசாரணை நடத்திய போலீஸார், 7.30 மணியளவில் கனல் கண்ணனை கைது செய்தனர்.
பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனல் கண்ணனை அழைத்துச் சென்ற போலீஸார், நாகர்கோவிலில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக கனல் கண்ணன் கூறுகையில், “எனது ட்விட்டர் கணக்கில் நான் பதிவிட்ட வீடியோ எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆவணங்களை போலீஸாரிடம் சமர்ப்பித்துள்ளேன். மேலும் இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் போலீஸாரிடம் வழங்கி இருக்கிறேன். ஆனால், போலீசார் முறையான விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தினர். இது தொடர்பாக எந்த பிரச்னை வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்திப்பேன்” என்றார்.
சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட்டு வருபவர்களை தி.மு.க. அரசு கைது செய்து கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெறித்து வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.