உண்மையில் சமூகநீதி காவலர் யார்?

உண்மையில் சமூகநீதி காவலர் யார்?

Share it if you like it

அனைவரையும் சமமாக பாவிப்பது, நமது நாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். யாதவர் குலத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சத்திரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமபிரான், பழங்குடியின குலத்தைச் சேர்ந்த வள்ளி, அவரை திருமணம் புரிந்த முருகர், யானை முகத்துடன் காட்சித் தரும் விநாயகர் என அனைவரையும், இறைவனாக பாவித்து, அனுதினமும் வணங்கி வரும் நமது நாட்டிலும், இந்து மதத்திலும் “சமூக நீதி” என்பது, எப்போதும் என்றென்றும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றது. சாதி கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, அனைவரையும் ஒன்றாக பார்ப்பது தான், நமது நாட்டின் பண்பாடு.

“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,

இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்”

என்ற சிந்தனையே, ஆதி காலம் தொட்டு, நமது மண்ணின் மகத்துவமாக இருந்து வருகின்றது.

நமது நாட்டில் சமூக நீதி என்பது, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வருகின்றது. மகாராஷ்டிரத்தில் பிறந்த ஜோதிராவ் பூலே, அவரது மனைவி சாவித்திரி பூலே, அம்பேத்கர், கேரளாவில் பிறந்த நாராயண குரு, தமிழகத்தில் பிறந்த வைத்தியநாத ஐயர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என பாரத நாடு முழுவதும், பல தலைவர்கள் சமூக நீதியை நிலை நாட்ட பெரிதும் பாடுபட்டனர்.

சமூக நீதிக்கு வித்திட்ட ஸ்ரீராமானுஜர்:

ஜாதி பேதம் பார்க்காமல், அனைவருடன் நெருங்கி பழகியவர், ஸ்ரீராமானுஜர். தனது குருநாதர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம், 17 முறை தொடர்ந்து நடந்து சென்று, வெற்றிகரமாக 18 வது முறை மந்திர தீட்சை பெற்றார்.

அதை யாருக்கும் வெளியில் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையையும் மீறி, கோவில் கோபுரத்தின் மீது ஏறி, ஊரார் அறியும் வகையில், “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தை உலகறியச் சொன்னார், ஸ்ரீ ராமானுஜர்.

கோபம் கொண்ட அவரது குரு, அனைவருக்கும் உரக்கக் கூறியதால், “நீ நரகம் தான் செல்வாய்” எனக் கூறிய போது, “ஆயிரக்கணக்கான மக்கள் சொர்கத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் போது, தான் நரகத்திற்கு செல்வது, மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

அனைவரின் நலனுக்காகவும் பாடுபட்ட ஸ்ரீ ராமானுஜர், சாதி பேதத்தை முற்றிலும் தவிர்த்தார், அனைவரிடமும் அன்பாக, நெருங்கிப் பழகி, 120 வருடங்கள் வாழ்ந்தார்.

தமிழகத்தில் பிறந்த ஸ்ரீ ராமானுஜருக்கு,  தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் அருகே, 216 அடி உயர பிரம்மாண்டமான சிலை வைக்கப் பட்டு, பாரதப் பிரதமர் அவர்கள், பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு, திறந்து வைத்தார்.

தமிழர்களைக் கொண்டாடும் இந்தியர்கள்:

தமிழகத்தில் பிறந்த திருவள்ளுவருக்கு உத்தரகாண்டில் உள்ள ஹரித்வாரிலும், கர்நாடகாவிலும் சிலை வைக்கப் படுவதும், பாரதியாரின் இருக்கை உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி பல்கலைக்கழகத்திலும், எம்.எஸ். சுப்புலட்சுமி சிலை ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியிலும் எனத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களை, இந்திய மக்கள் போற்றிக் கொண்டாடுவது, நமது நாட்டின் ஒற்றுமையை, உலகிற்கு பறை சாற்றுகின்றது.

இதன் மூலம், இந்த நாட்டில், மக்கள் மனதிலும், வாழ்விலும் “சமூக நீதி” என்பது ஆரம்பத்தில் இருந்தே, தொன்று தொட்டு இருப்பதை, நம்மால்  உணர முடிகின்றது.

நமது நாட்டை ஆட்சி புரிய வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும், நமது மக்களை பிளவுப் படுத்தி, வெறுப்பை ஊட்டி, பகைமையை ஏற்படுத்தினார்கள் என்பது, நாம் அறிந்த வரலாறு.

வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பது:

எல்லோரையும் சமமாக பாவித்து, சரிசமமாக நடத்துவது தான் சமூக நீதி. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதும், மற்ற மத பண்டிகை எனில், அவர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன் அவர்களின் மத சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் என, இருவேறு கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

மக்களை புண்படுத்தியது:

1971 ஆம் ஆண்டு, சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், பெரும்பான்மையாக வசிக்கும் இந்து மக்களை புண்படுத்தும் வகையில், அவர்கள் அன்றாடம் வழிபடும் பகவான் ஸ்ரீ ராமரை அவமானப் படுத்தும் எண்ணத்தில் செயல்பட்டது, இந்துக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.

இந்துக்கள் வழிபடும் தெய்வங்களை, மிகவும் இழிவுபடுத்தி பேசியது,  பக்தர்களிடையே மிகுந்த வேதனையை உண்டாக்கியது.

தாலி:

இந்துப் பெண்கள் புனிதமாக கருதும் தாலிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திராவிடர் கழகத்தினர், நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அந்த நிகழ்வைக் கண்ட இந்து பெண்களுக்கும், இந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும், மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

சமூக நீதி பாகுபாடு:

இந்து பெண் லாவண்யா உயிர் துறந்த போது, எந்த கருத்தும் தெரிவிக்காத சில அரசியல் தலைவர்கள், மற்ற மாநிலத்தில் ஏற்பட்ட, உடை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு, உடனே கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் பெண்ணுக்கு ஒரு நீதி? மற்ற மாநில பெண்ணிற்கு ஒரு நீதியா? இது தான் இவர்களது சமூக நீதியா?

போலீசாரின் காவலில் உயிர் நீத்த, சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் –  பெனிக்ஸூக்காக நிறையப் போராடிய அரசியல் கட்சியினர், ராமநாதபுரம் அருகே உள்ள முதுகுளத்தூரில், போலீஸாரின் காவலில் மரணம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்காக என்ன போராடினார்கள்? எங்கு போராடினார்கள்? இது தான் இவர்களின் சமூக நீதியா?

ஏன் இந்த பாகுபாடு:

மற்ற மதப் பண்டிகைகள் எனில், முழுவதுமாக கலந்து கொண்டு சிறப்பிப்பதும், அவர்களைப் போற்றிப் புகழ்வதும், இந்துக்கள் வழிபடும் தெய்வங்களை, கோவில்களை ஆபாசமாக விமர்சிப்பதும், சிலரை சாதி ரீதியாக விமர்சிப்பதும், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை காலங்களில், இந்துக்களின் பண்டிகைகளை மிகக் கடுமையாக விமர்சிப்பது என ஓரு மத நம்பிக்கைகளுக்கு மட்டுமே பாகுபாடு காட்டுவது ஏன்? இது தான் இவர்களது சமூக நீதியா? எனக் கேட்டு, அப்பாவி மக்கள் கோபம் கொள்கின்றனர்.

தட்டிக் கேட்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர், அவர்களுக்கு துணை போவது, ஓட்டு போட்ட மக்களுக்கு, அதிர்ச்சியாக உள்ளது.

எல்லோரையும் அரவணைத்து, எல்லோருக்கும் ஏற்றம் தரும் வகையில், திட்டங்களைத் தீட்டி, எவருடைய மனதும் புண்படாத வகையில், மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதே, உண்மையான சமூக நீதி ஆகும்.

பள்ளம் – மேடு என இருக்கும் போது, பள்ளத்தை நிரப்ப முயற்சி செய்ய வேண்டுமே தவிர, மேடான இடத்தில் சில பகுதிகளை எடுத்து, அதை பள்ளமாக்க முயலக் கூடாது. பள்ளத்தை உயர்த்த வேண்டுமே தவிர, மேடான பகுதிகளை கீழே இறக்கக் கூடாது.

அனைவரும் ஒரு சேர உயர்ந்து, எல்லோரும் சரி சமமாக வாழ்வதே, உண்மையான சமூக நீதி.

 ” எல்லோரும் ஓர் குலம்

            எல்லோரும் ஓர்இனம்

             எல்லோரும் இந்திய மக்கள்

             எல்லோரும் ஓர் நிறை

             எல்லோரும் ஓர் விலை

            எல்லோரும் இந்நாட்டு மன்னர் -நாம்

            எல்லோரும் இந்நாட்டு மன்னர்- ஆம்

            எல்லோரும் இந்நாட்டு மன்னர்” – பாரதியார்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it