திருமாவளவனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த ராணுவ வீரரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறது தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. தற்போது, மேகாலயாவில் சி.ஆர்.பி.எஃப். வீரராக பணிபுரிந்துவரும் இவர், தேசத்துக்கு ஆதரவாக வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உதாரணமாக, நீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுத்தபோது, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தை சுட்டிக்காட்டி நீட் தேர்வின் அவசியத்தை விளக்கி வீடியோ வெளியிட்டார். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சியில் மணப்பாறை அருகே சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது ஊடகங்கள் நேரலையாக செய்தியை ஒளிபரப்பு மக்களை பதட்டத்தில் வைத்திருந்ததையும், தி.மு.க. ஆட்சியில் குவாரி இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தபோதும் கூட, பத்தோடு பதினொன்றாக செய்தி வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு ஊடகங்கள் ஓவர் பில்டப் கொடுத்த ரிவியூ கொடுத்ததையும் வீடியோ மூலம் கழுவிக் கழுவி ஊற்றினார்.
மேலும், தி.மு.க. ஹிந்திக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, ஹிந்தியை திணிச்சா தப்பு, ஆனா மதுவை திணிச்சா தப்பில்லையா என்று தில்லாக கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டார். இந்த சூழலில், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில், தமிழ்நாட்டை தனிநாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நீ சரியான ஆம்பளையா இருந்தா தனிநாடு கேட்டு வீதிக்கு வா பார்ப்போம் என்று பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், குருமூர்த்தியை போனில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், நீ எல்லையில் இருக்கலாம். ஆனால் உன் குடும்பத்தினர் இங்குதானே இருக்கிறார்கள். அவர்களின் கதி என்னாகும் தெரியுமா? என்றும் மிரட்டினார்கள். இதையும் ரெக்கார்டு செய்து வெளியிட்டிருந்தார் குருமூர்த்தி.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, குருமூர்த்தியை தொடர்புகொண்டு தைரியம் சொன்னதோடு, அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பாக பா.ஜ.க. இருக்கும் என்றும் கூறினார். இதை மெய்ப்பிக்கும் வகையில், விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர், கீழராஜகுலராமன் கிராமத்திலுள்ள ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த சூழலில், ராணுவ வீரர் குருமூர்த்தி, மேகாலயாவில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இதையறிந்த தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், குருமூர்த்தி வீட்டுக்கு நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, தைரியம் கூறி ஆதரவுக்குக் கரம் நீட்டிவிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.