இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் சமூக ஊடகங்களின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள், சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும், என பொதுமக்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்து இருந்தனர். அதனை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைத்தளங்களின் மீது மத்திய அரசு தனது பார்வையை திருப்பியது. அதன் அடிப்படையில் புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் குறை தீர்த்தல் அதிகாரியை உடனே நியமனம் செய்ய வேண்டும், என்பன போன்ற பல நிபந்தனைகளை மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள், வாட்ஸ்-அப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், புதிய விதிகளை ஏற்க தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான ட்விட்டர் நிறுவனம்.
புதிய விதிகளை ஏற்கும் படியும், இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி, மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கூடாது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் உட்பட அதன் தோழமை கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசிற்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான தேர்தல் அரசியலில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். இது கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியுள்ள நிலையில் சோனியா காந்தியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.