தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில்தான் அதிகம் பேர் ஹிந்தி படிப்பதாக ஹிந்தி பிரசார சபா தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்து எதிர்ப்பு என்பது அரசியலாக்கப்பட்டு விட்டது. தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக, தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் ஹிந்தி கனவு கானல் நீராகவே இருந்து வந்தது. இந்த சூழலில்தான், மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது. நாட்டில் வசிக்கும் அனைத்து மாநில மக்களும் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளை கொண்டுவந்தது. தமிழகத்தைத் தவிர, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளின் மூலம் மாணவர்களின் ஹிந்தி கனவு தற்போது நிறைவேறி வருகிறது.
இதைக் கண்ட தமிழக மாணவர்கள், ஹிந்தி எதிர்ப்பு அரசியலை புரிந்து கொண்டனர். இதன் பிறகு, தமிழக மாணவர்களும் ஹிந்து படிக்கத் தொடங்கினர். இதன் பயனாக தமிழகத்தில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை 3.17 லட்சத்தில் இருந்து 3.28 லட்சமாக உயர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஹிந்தி பிரசார சபா, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேர் ஹிந்தி படிப்பதாக தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் ஹிந்தி கற்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
நடப்பாண்டில் ஹிந்தி படிப்பவர்கள் 1.31 லட்சமாக இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் 34,589 பேர் ஹிந்தி பயின்று வருகின்றனர். எனினும், ஹிந்தியில் இளநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகளை படிக்க தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், மத்திய அரசு தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி, 3-வது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. தவிர, மத்திய அரசு அலுவலங்களில் பயிற்று மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். ஆக மொத்தத்தில், தி.மு.க.வின் ஹிந்தி எதிர்ப்பானது அக்கட்சிக்கு எதிராகவே திரும்பி வருகிறது.