நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல இசை கலைஞர் சங்கர் மகாதேவன் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் கூறி சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவருக்கும் வலிமை அளிக்க வேண்டும் என தேவி சரஸ்வதியைப் பிரார்த்தித்தார்.
தனது சுருக்கமான உரையில், ஆண்டுதோறும் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என சங்கர் மகாதேவன் கூறினார்.
தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட செய்தி வாட்ஸ்ஆப்பில் பரவியதைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான அழைப்புகள் வந்ததாகவும், தனக்கு இந்த மாபெரும் கவுரவத்தை வழங்கிய அனைத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சில தருணங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன. இந்த பூமியில் நமது பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று அவருக்கு அப்படிப்பட்ட நாள் என்றும் சங்கர் மகாதேவன் கூறினார்.
மும்பையில் திரு மோகன் பகவத் ஜீயை சந்திப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது. இந்த நாட்டில் பலர் இதை அனுபவிக்க விரும்புகிறார்கள். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி . விழாவில் கலந்து கொள்ளுமாறு டாக்டர் பகவத் தனக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கலாம், ஆனால் இந்த விழாவுக்கான அழைப்பானது தனிப்பட்ட முறையில் அன்பு, மரியாதை மற்றும் அரவணைப்புடன் இருந்தது. எனது நாக்பூர் வருகை மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மனதைக் கவரும் அனுபவமாக இருந்தது. இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி மற்றும் அதன் ஒவ்வொரு அம்சமும் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது என்பதை கண்டு ஒரு பெருமைமிக்க பாரதியனாக உணர்கிறேன் என சங்கர் மகாதேவன் பெருமையுடன் தெரிவித்தார்.
பொதுவாக பாடகர்களும் இசைக்கலைஞர்களும் பேசும்படி கூறினால் பயப்படுவார்கள் என்று கூறிய சங்கர் மஹாதேவன் தனது உரையில் தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கும்படி டாக்டர் பாகவத்தை கேட்டுக் கொண்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு , தேசம் மற்றும் சேவை மீதான அதன் அன்பு பழம்பெருமை வாய்ந்தது. அந்த வகையில் நன்றியுடன் அதன் ஆசீர்வாதங்களை நாடுவதாக சங்கர் மகாதேவன் கூறினார். தேசத்தின் மீதான ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்பிற்கு தனது வணக்கத்தை தெரிவித்த அவர், வேறு யாரும் முயற்சி செய்ய முடியாத வகையில் நாட்டின் மரபுகள், கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஆர்.எஸ்.எஸ்.இன் பணிக்கு தனது மரியாதையை தெரிவித்தார்.
இசை பற்றி சிறிது பேச விரும்புவதாக கூறிய சங்கர் மகாதேவன் நமது பண்டைய பாரத நாட்டின் இசை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிகவும் செழுமையாகவும் மாறுபட்டதாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.
ஓம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இது மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒலிக்கிறது. ஓம் என்ற சொல்லை உள்ளடக்கிய நமது நாட்டிய சாஸ்திரம், உபநிஷங்கள் மற்றும் வேதங்கள், ஒவ்வொரு உயிரினத்தின் அமைதிக்காகவும் பிரார்த்திக்கின்றன.அதையே எதிர்கால சந்ததியினர் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கர் மகாதேவன் கூறினார்.
அரசியல்வாதிகள் அல்லாத தன்னை போன்றவர்களுக்கு ஒரு நாடு செயல்படும் நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் இந்த நாட்டின் ஒவ்வொரு நபரும் அவரவர் தொழில்களைப் பொருட்படுத்தாமல் இந்த மகத்தான நாட்டின் நெறிமுறைகளை மதித்து நம் பாரதத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒருவரின் தொழில் எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு மாற்றத்தை ஏற்படுத்த நாம் உழைக்க வேண்டும்.
ஒரு இசைக்கலைஞராக இருப்பதால், பல வருடங்கள் பழமையான நமது இசையை உலகம் முழுவதும் பரப்ப எப்போதும் முயற்சி எடுத்து வருகிறேன். நான் கச்சேரி செய்யும் போதெல்லாம், இசையின் மூலம் நம் கலாச்சாரத்தைப் பரப்புவதை எப்போதும் குறிக்கோளாக கொள்கிறேன். உதாரணமாக, நான் மாணவர்கள் மத்தியில் பாடும்போது, எப்போதும் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.அதேபோல, காதல், ஆக்ஷன் என எந்தப் படத்துக்கு இசையமைத்தாலும், அது அடுத்த தலைமுறைக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, நம் கலாசாரத்துடன் இசையை புகுத்துவதையே எப்போதும் முக்கியக் கடமையாகக் கருதுகிறேன் என்று சங்கர் மகாதேவன் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பின் போது இசைக் குழுவினரின் வாசிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறிய சங்கர் மகாதேவன், எதிர்காலத்தில் அத்தகைய வாய்ப்பு ஏற்பட்டால், இசையமைத்தல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபடுவதில் தான் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
சங்கர் மகாதேவன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய மியூசிக் அகாடமியின் மூலம், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நமது சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்றுக்கொடுக்கிறார். உலகெங்கிலும் உள்ள இசைக்கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்திய பிறகு, நம் பாரதத்தின் இசைதான் சிறந்த இசையாக உணர்வதாக சங்கர் மகாதேவன் கூறினார்.
நான் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன், பாரதம் மற்றும் நமது கலாச்சாரம் உண்மையிலேயே தகுதியான மரியாதையைப் பெறுகிறது. எனவே நீங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும், நீங்கள் பாரதத்தின் பெருமைமிக்க குடிமகன் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளுங்கள் என்று சங்கர் மகாதேவன் தெரிவித்தார்.
தனது உரையின் முடிவில் அரேபிய மொழியோ ஆப்பரிக்க மொழியோ எந்த இசையிலும் சர்கம் உள்ளது. இந்த சர்கம் என்பது நாசாவில் பயன்படுத்தப்படும் பைனரி குறியீடுகளைப் போன்றது. அவற்றை ஆங்கில எழுத்துக்களில் டிகோட் செய்யலாம். அந்த வகையில் இசைக்கு உயிர் கொடுப்பது சர்கம்.
இந்த நாட்டில் எங்கு எந்தப் பிரச்சனை, பேரழிவு ஏற்பட்டாலும், ஒரு ஸ்வயம் சேவகர் அந்தச் சூழலை நிவர்த்தி செய்ய மௌனமாகப் பின்னால் உழைக்கிறார். அந்த வகையில் நம் தேசம் இசை என்றால் ஸ்வயம் சேவகர்தான் சர்கம் என்று சங்கர் மகாதேவன் தெரிவித்தார்.
இறுதியாக சர்சங்சாலக் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் சங்க பரிவார உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஸ்ரீ பிரசூன் ஜோஷியின் வரிகளைப் பாடி சங்கர் மகாதேவன் தனது உரையை முடித்தார்.