தமிழகத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்து மத வழிபாட்டுத் தலங்கள்

தமிழகத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்து மத வழிபாட்டுத் தலங்கள்

Share it if you like it

தமிழகத்தில் திமுக அரசு அரியணை அமர்ந்த கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் தொடர்ச்சியாக இந்து மத வழிபாட்டுத் தலங்கள் பண்டிகைகள் உற்சவங்கள் மீது அடக்குமுறைகளும் அராஜகமும் திணிக்கப்படுகிறது. மாற்று மதம் சார்ந்த அமைப்புகள் தனி மனிதர்கள் தொடர்ச்சியாக இந்து மதத்தின் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் ஆலயங்கள் ஆகமங்களில் தலையிடுவதும் அத்துமீறுவதும் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதும் தொடர்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் இந்து ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையும் அதன் அமைச்சரும் இந்து மத வழிபாட்டு தலங்களை அனைவருக்கும் பொதுவான சுற்றுலா தலமாக நிறுவும் முயற்சியில் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் இந்து ஆலயங்களின் மீது மாற்று மதத்தவரின் ஆக்கிரமிப்புகளும் அபகரிக்கும் மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உரிய ஆவணங்கள் இல்லை என்று 200க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் தமிழகத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தின் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அமைச்சகங்கள் முழு உடந்தையாக இருந்ததும் இதை தட்டி கேட்க வேண்டிய இந்து அறநிலையத்துறை அவர்களுக்கு முழுமையாக உடன்பட்டதும் தமிழக மக்களை அதிர வைத்தது. அதே நேரத்தில் நீதிமன்றங்களே இந்து ஆலயங்களில் இருக்கும் அந்நிய ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இந்து ஆலயங்கள் உரிமையான நிலங்கள் வணிக வளாகங்களில் மாற்று மதத்தினருக்கு அனுமதி கூடாது என்று உத்தரவிட்ட பிறகும் கூட பல இடங்களில் மாற்று மதத்தவர் ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது. இந்து ஆலயங்களுக்கு உரிமையான பல நூறு ஏக்கர் நிலங்களும் பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் இன்னுமும் ஆக்கிரமிப்பில் பலரது இருக்கிறது. இதில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கூட தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டு தனது வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து ஆலயங்களை அழிக்க முற்படுகிறது.

இந்த வாக்கு வங்கி அரசியலுக்காக தான் மேடை தோறும் சிறுபான்மை மக்களின் வாக்குப் பிச்சையில் தான் எங்களின் ஆட்சியே இருக்கிறது. இந்த ஆட்சியே உங்களின் நலனையும் வளத்தையும் பாதுகாப்பதற்காக தான் என்று மேடைக்கு மேடை ஆளும் திமுகவினர் பேசி வருகிறார்கள் . ஏற்கனவே தமிழகத்தில் மதமாற்றம் பிரிவினை வாதத்தில் தலைவிரித்து ஆடும் அந்நிய மதம் சார்ந்த அமைப்புகளும் தனி நபர்களும் ஆளும் மாநில அரசே தங்களுக்காக முழு ஆதரவோடு இருக்கும் துணிச்சலில் மேலும் மேலும் இந்து ஆலயங்களுக்கும் வழிபாடுகள் நம்பிக்கைகளுக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். இந்து ஆலயங்களில் மது அசைவ உணவுகளை கொண்டு போய் உண்பது ஆலயங்களை இழிவு படுத்துவது அனுமதிக்கப்பட்ட வரையறைகளை மீறி ஆலயத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்பது என்று அவர்கள் தொடரும் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சமீபத்தில் பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தவர் பிரவேசிக்க முயற்சி செய்து அது பெரும் சர்ச்சையானது. இவ்விவகாரத்தில் பழநி மலை கோவிலை இந்து ஆன்மீக தலம் என்பதற்கு பதிலாக அனைவருக்கும் பொதுவான சுற்றுலா தலம் என்று பேசி இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவரது அப்பட்டமான இந்து விரோதத்தை வெளிப்படுத்தினார். ஆன்மீகவாதிகள் நீதிமன்றத்தை அணுகி மதுரை உயர்நீதிமன்ற கிளையிடம் உரிய பாதுகாப்பு உத்தரவை பெறப்பட்ட பிறகு பழநி மலைக்கோவிலில் தற்காலிகமாக அமைதி திரும்பியது. சற்றே நிம்மதி அடைந்த நிலையில் சென்னிமலை ஆண்டவர் கோவிலை கைப்பற்றி கல்வாரி மலையாக மாற்றப் போகிறோம் என்று சரவணன் ஜோசப் என்னும் கிறிஸ்தவ பாதிரியார் அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் தமிழகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் மாநில நிர்வாகமும் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவ வாக்கு வங்கிக்காக கள்ள மவுனம் காத்தது. வெகுண்டு எழுந்த உள்ளூர் ஆன்மீகவாதிகளும் பொதுமக்கள் இந்து அமைப்பினர் பாஜக உள்ளிட்ட கட்சி ஆதரவோடு தன் எழுச்சியாக 25,000 க்கும் மேற்பட்டோர் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து சென்னிமலை ஆண்டவர் கோவிலை கைப்பற்ற போகிறோம் என்று மிரட்டல் விடுத்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரும் அவர்களின் ஆதரவாளர்களும் பின்வாங்கினார்கள். பதற்றத்தை தணிக்கும் வகையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தாமாக முன்வந்து வருத்தம் மன்னிப்பு கோரும் காணொளி அறிக்கையை வெளியிட்டு சென்னிமலை ஆண்டவர் கோவில் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தக் காயங்கள் ஆறும் முன்னே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற புராண கால வைணவ தலமான திருநீர்மலை நீர் வண்ணப் பெருமாள் ஆலயத்தையும் அந்த மலையையும் கைப்பற்ற போவதாக கிறிஸ்தவ அமைப்புகள் மிரட்டல் விடுத்திருப்பது தமிழகத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.புராதன ஆலயமான திருநீர் மலையில் அந்தோணியார் ஆலயமா? என்று. சனாதன மக்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள். ஆகலயத்தை ஆக்கிரமிக்க முயலும் அந்நிய மதம் சார்ந்த அமைப்புகளை எச்சரித்து ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் கட்சியின் தலைமை குடும்பத்தின் ஆலய தரிசனத்திற்கு குடை பிடித்து போவதே கடமையாக கொண்டுள்ளார்.

நாங்கள் தான் ஈடில்லா ஆட்சி தரும் இணையில்லா சாதனையாளர் என்று தம்பட்டம் பேசும் மாநில முதல்வர் வெளிப்படையாக தனது மகனின் சனாதன ஒழிப்பு மாநாட்டு பேச்சிற்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். தாமாக முன்வந்து ஆலயங்கள் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்களும் பல நேரங்களில் மௌனம் காப்பது தமிழகத்தில் இருக்கும் இந்த ஆலயங்கள் ஆன்மீக வழியில் வாழும் மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. அனைத்து மத மக்களும் ஒன்றாக வாழும் இந்த நாட்டில் எதற்காக இந்த விஷமிகள் இப்படிப்பட்ட இந்து மத துவேஷத்தில் இறங்குகிறார்கள்? அவரவர் வழிபாடுகளை அவரவர் வழியில் அவர்களுக்கு உண்டான மத வழிபாட்டு தலங்களில் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து இந்து ஆலயங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவதும் அதை கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமாக மாற்றுவோம் என்று மிரட்டுவதும் எப்படிப்பட்ட மத நல்லிணக்கம்? இதை வாய் மூடி கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாநில அரசு எப்படிப்பட்ட மத நல்லிணக்க அரசாக இருக்க முடியும்?.

200 ஆலயங்களை இடிக்கும் போதே சிறிய அளவில் மக்கள் எதிர்ப்புகளையும் மன வருத்தங்களையும் பகிர தொடங்கினார்கள். ஆனால் அதையெல்லாம் ஆட்சியாளர்கள் புறம் தள்ளி தொடர்ச்சியாக அராஜகமாக ஆலயங்களை தரைமட்டமாக்கி வந்தார்கள். ஆனால் அதன் பின்னணியில் சட்டபூர்வமாக உரிய ஆவணங்கள் இல்லை என்ற வாதம் மாநில அரசால் முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக மிகுந்த மன வலியோடு தமிழக மக்களும் ஆலய தகர்ப்பை அமைதியாக கடந்து போனார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இந்து ஆலயங்கள் அதன் ஆகமங்கள் வழியில் தொடர்ந்து வழிபாட்டில் இருக்கும் இருக்கும் கோவில்கள். அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறை அதன் மூலம் பல கோடி வருமானத்தின் மூலம் கொழித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இடையில் இது போன்ற வருவாய் கொழிக்கும் ஆலயங்களை மாற்று மதத்தவர் கைப்பற்றுவோம் அபகரிப்போம் என்று பேசும்போது கூட மாநில இந்து அறநிலையத்துறையும் முதல்வரும் வாய்மூடி வேடிக்கை பார்ப்பார்கள் எனில் இதன் பின்புலம் முழுவதுமாக ஆராயப்பட வேண்டும். இந்து ஆலயங்கள் மீது தமிழகத்தில் நடக்கும் அத்து மீறல்கள் பற்றி தேசிய பாதுகாப்பு முகமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.


Share it if you like it