இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை கண்காணிக்கும் வகையில், இலங்கை கடற்பகுதியில் சீனா ரேடார் அமைக்கவிருக்கும் விவகாரம் அம்பலமாகி இருக்கிறது.
இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கும் சீனா, தனது ‘யுவான் வாங் 5’ ன்கிற உளவுக் கப்பலை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. சீனாவின் இந்தகைய செயலுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. எனினும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பலை தொடர்ந்து 7 நாட்கள் ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலை நிறுத்தி இருந்தது. இது இலங்கை அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை கடனாக வாங்கி இருக்கும் இலங்கை, இந்தியாவிடமிருந்தும் கடன் பெற்றிருப்பதோடு, அரிசி, பால், எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட உதவிகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில்தான், சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு அருகே அமைந்திருக்கும் இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில், தனது அறிவியல் அகாடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ரேடார் தளத்தை அமைக்கவிருப்பதாக நமது கடற்படையின் உளவு அமைப்பு, 12 பக்கங்கள் கொண்ட ரகசிய அறிக்கையை, நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த அறிக்கையில், “இலங்கையின் மீன்பிடி துறைமுகமான தொன்ட்ரா பே என்ற இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரேடார் அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக, அந்த இடத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்குமாறு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அவ்வாறு அந்த இடத்தில் ரேடார் அமைக்கப்பட்டால் தென்மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களிலிருந்து இயங்கும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படைகளின் ரோந்துக் கப்பல்கள், படகுகளின் இயக்கத்தை ரேடார் தளத்தின் மூலம் சீனாவால் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும், இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களை கண்காணிப்பதோடு, தொன்ட்ராவிலிருந்து தென் மேற்கே 2,500 மைல் தொலைவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘டியாகோ கார்சியா’ தீவிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் உளவு பார்க்க முடியும். அதோடு, இந்திய பெருங்கடலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களையும் சேகரிக்க முடியும்.
அதேபோல, கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றையும் கண்காணிக்க முடியும்” என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதோடு, இந்த ரேடாரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறு. தொடர்ந்து அந்த அறிக்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மூலம் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 12-ம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.