அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் தேர்தல் வந்தால் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என்று வாய் தவறி உளறிக் கொட்டிய வீடியோவை தி.மு.க.வினர் வைரலாக்கி வருகின்றனர்.
தி.மு.க. அரசை கண்டித்து சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்திலுள்ள 2.50 கோடி பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், தற்போது 1 கோடி பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். மேலும், முதியோர் உதவித்தொகை இல்லை என்கிறார்கள். விதவை பென்சன் இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பெண்கள் தி.மு.க. அரசு மீது கடும் கோவத்தில் இருக்கிறார்கள்.
ஆகவே, இப்போது தேர்தல் வைத்தாலும், தி.மு.க.வை 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்துவிட்டு மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என்று வாய் தவறி உளறிக் கொட்டினார். இதையடுத்து பக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்து, அவரது தவறை சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து பேசிய மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அச்சச்சோ வாய் தவறி உளறி விட்டேன். ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என்று கூறினார். ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் பேசிய இந்த வீடியோவை, ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறியதை மட்டும் தி.மு.க.வினர் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.