மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கிய அஸ்வத்தாமன்.
கடலூர் முந்திரி பருப்பு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். அந்த அளவிற்கு, இதன் தரமும் சுவையும் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முந்திரி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான், கடந்த 2011 – ஆம் ஆண்டு தானே புயல் கடலூர் மாவட்டத்தில் தனது கோர முகத்தை காட்டி இருந்தது. அந்த வகையில், புயலின் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் மீண்டாலும் அவர்களின் வாழ்வாதாரம், சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதே நிதர்சனம். இப்படியாக, அவர்களின் நிலைமை இருந்து வருகிறது.

முந்திரி விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று வரை கள்ள மெளனமாக இருந்து வருகின்றனர். ஆனால், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில செயலாளருமான அஸ்வத்தாமன் அண்மையில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை வழங்கி இருக்கிறார்.

கோரிக்கை மனுவின் சாராம்சம்…
பயோ எத்தனால் தயாரிக்கும் பட்டியலில் அரிசி உமி, கோதுமை உமி மற்றும் கரும்பு சக்கை போன்றவை இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டு தோறும் டன் கணக்கில் வீணாகும் முந்திரி பழத்தையும் இப்பட்டியலில், சேர்க்க வேண்டும் என முந்திரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவினை அஸ்வத்தாமன் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
