பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனை கல்லறையில் புதைக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் – ஜெனிஃபர் தம்பதியின் மகன் தீக்ஷித். 7 வயதான இச்சிறுவன், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலையில் பள்ளி வேனில் பள்ளிக்குச் சென்ற தீக்ஷித், தனது பையை வேனிலேயே வைத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். பின்னர், பையை எடுப்பதற்காக வேனை நோக்கி ஓடி வந்திருக்கிறான். அப்போது, வேன் பின் நோக்கி வந்த வேன், எதிர்பாராவிதமாக தீக்ஷித் மீது மோதிவிட்டது. இதில், சிறுவன் தீக்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான்.
இதையடுத்து, சிறுவன் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ கல்லறையில் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு, கல்லறை நிர்வாகமோ பாதிரியார்களிடம் கடிதம் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்கள். பாதிரியாரிடம் சென்று கேட்டதற்கு, நீங்கள் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள். நாங்கள் ஆர்.சி. கிறிஸ்தவர்கள். ஆகவே, ஆர்.சி. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான கல்லறையில், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்று கூறி, நிராகரித்து விட்டதாக அவரது தாயார் ஜெனிஃபர் கண்ணீர் ததும்ப கூறிய காட்சி, காண்போர் நெஞ்சை கரையவைப்பதாக இருந்தது. மேலும், இதேபோல கடந்தாண்டு தனது தாயார் இறந்தபோது, சர்ச்சுக்குச் சென்று பாதிரியார்களிடம் தனது வீட்டில் வந்து பிரேயர் செய்யும்படி கேட்டதாகவும், அதற்கு சர்ச் நிர்வாகம் இதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக, கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, ஆர்.சி., சி.எஸ்.ஐ., புரோட்டஸ்டாண்ட், அல்லேலூயா என ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குமே தனித்தனியாக சர்ச்சுகளும், கல்லறைகள் இருக்கின்றனர். ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருடனும் சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதேபோல, எல்லா விஷயங்களிலுமே ஒவ்வொரு பிரிவினரும் மாறுபட்டு இருப்பார்கள். ஆகவேதான், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவரான ஜெனிஃபரின் மகன் தீக்ஷித்தை, ஆர்.சி. கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம செய்ய மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜெனிஃபர் என்னய்யா மதம் இதெல்லாம். கிறிஸ்தவத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.