பொதுத்தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்கள் – காரணம் என்ன ?

பொதுத்தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்கள் – காரணம் என்ன ?

Share it if you like it

பொதுத்தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்கள் – காரணம் என்ன ?

சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் தாள்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகளை சுமார் 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மற்ற தேர்வுகளில் எத்தனை மாணவர்கள் வரவில்லை என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

விசாரணையில் தேர்வுகளை எழுதாத மாணவர்கள் பெரும்பாலானோர் பல மாதங்கள் பள்ளிக்கு வராதவர்கள் என்று தெரியவந்தது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தொடர்ந்து 3 மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அது குறித்து பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அப்படியிருக்க சுமார் 8 மாதங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் தகவல் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.

மேலும் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு நல உதவிகள் என்னவானது. யாரிடம் சென்றது என பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன ?
இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலையும் அதற்கான காரணத்தையும் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேர்வு எழுதாத மாணவர்களை அடுத்த ஜூன் மாதம் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடங்க உள்ள 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்தார்.

இந்நிலையில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் முதல் தேர்விலேயே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்காதற்கு காரணம் என்ன ?

மேலும் இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 811 மாணவர்கள் ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்றால் ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வராத மாணவர்கள் எப்படி பொதுத்தேர்வு பட்டியலில் இடம்பெற்றார்கள் என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
விதிமுறைப்படி பள்ளிக்கு தொடர்ந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று சேரும். ஆனால் பொருளாதார சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, உடல்நல பிரச்சனைகள் என பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பள்ளிக்கு வராதத்தற்கான காரணங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படும்.

அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வராத பட்சத்தில் அவர்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும். பொதுத்தேர்வுக்கான பட்டியலிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெறாது.

இந்த சூழ்நிலையில் 8 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்கள் பல பள்ளிகளில் நீக்கப்படவில்லை. அப்படி என்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நல உதவிகள் உண்மையில் யாருக்கு சென்றன ? இதில் நடந்த முறைகேடு என்ன? இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது ? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்ற விவரத்தை பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே அளித்தால் மட்டுமே அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரவும் தேர்வுகளை எழுதவும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் இப்படி தகவல்கள் மறைக்கப்பட்டால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதற்காகவே மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் தற்போது நிலவும் மோசமான கல்வி சூழல் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை குறைத்துவிடுகிறது.

இன்று பள்ளிகளில் மதிப்பெண்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறன்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவர்கள் தங்கள் கல்வியை கைவிட முக்கிய காரணமாகிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது மிகவும் அவசியம். இதற்கான முயற்சியில் பள்ளி நிர்வாகமே முக்கிய பங்காற்ற வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ அதற்கு நேர்மாறாக உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளில் நடக்கும் இந்த முறைகேடு தடுக்கப்பட வேண்டும். இது குறித்து பாரப்பட்சமின்றி விசாரிக்க தனி குழு அமைக்கப்பட வேண்டும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போதே இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை. தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் இதே தவறு நடந்திருக்கும் நிலையில் இனியாவது இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு கவனம் செலுத்துமா?


Share it if you like it