ஒரு காவியின் காவியம் – சுப்ரமணிய சிவா

ஒரு காவியின் காவியம் – சுப்ரமணிய சிவா

Share it if you like it

நம் பாரதத்தாயின் அருள் வேண்டி நடைபெற்ற சுதந்திர வேள்வியில் தன் உடல் பொருள் ஆவியை நெய்யாக வார்த்து வளர்த்த எண்ணற்ற விடுதலை வீரர்களில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. தான் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் தன் அரசியல் மற்றும் ஆன்மீக அனுபவங்களைக் கொண்டு, தன்
இளமையையும், இன்னுயிரையும் தாய் திருநாட்டிற்கு தாரை வார்த்தவர் சுப்பிரமணிய சிவா. தென்தமிழ் நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ம் தேதி 1884ல் ராஜம் அய்யர் நாகம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ‘சிவா’ என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா. இவருக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருந்தனர். தன் பள்ளிப்படிப்பை திண்ணை பள்ளியில் தொடங்கிய சிவா தனது 9வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார். பின்னர் மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இந்நிலையில் வறுமையின் காரணத்தால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் போகவே திருவனந்தபுரம் சென்று அங்கு ஊட்டுப்புறையில் இலவச உணவுடன் கல்வி பயின்றார். அதன் பின் கோவையில் St. Michael’s College ல் ஓர் ஆண்டு மேற்படிப்பை தொடர்ந்தார் சிவா. தேர்வில் வெற்றி பெற முடியாமல் கல்வியை பாதியில் கைவிட்ட சிவா, 1899ல் மீனாட்சியம்மை என்பவரை கரம் பிடித்தார். இல்லற வாழ்வின் தொடக்கத்திலேயே சிவாவின் மனம் துறவறத்தை நாடியது. 1902ல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக்கரையில் சதானந்த சுவாமிகள் என்றவரிடம் சிலகாலம் தங்கி ராஜயோகம் பயின்றார். இந்நிலையில் 1906ம் ஆண்டு சிவாவின் தந்தை ராஜம் அய்யர் காலமானார்.

ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வாலிப சிவா வைராக்கிய மிகு ‘சிவம்’ ஆனார். 1905ல் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் உருவான மத ரீதியான வங்காளப் பிரிவினைக்கு எதிரான மக்கள் இயக்கம் சுதந்திரத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிக் கொண்டது. இந்நிலையில் இந்த மாபெரும் மக்கள் எழுச்சியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார் சிவம். திருவனந்தபுரத்தில் இளைஞர்களைத் திரட்டி சொற்பொழிவு பயிற்சிகள் மூலம் சுதந்திர போராட்டத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தார். இவரின் செயல்பாடுகள் ஆங்கில அரசிற்கு எதிராக அமைந்ததால் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவம் கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்தார். இந்த கால கட்டத்தில் சிவத்திற்கு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கிய ‘வ.வு.சி’ என அழைக்கப்பட்ட ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளையின் அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது.

ஈருடல் ஓர் உயிராக இனைந்த இருவரும் தங்கள் சொற்பொழிவுகள் மூலம் இவர்கள் பாடியதேசியப் பரப்புரை செய்தனர். இவர்கள் இருவருடன் தேசிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியும் இணைய இந்த மூவர் கூட்டணி திரிசூலமாக மாறி ஆங்கில அரசை ஆட்டம் காணச் செய்தது. தென் தமிழகம் முழுவதும் அழகிய தமிழ் மூலமாக இவர்கள் பாடிய சுதந்திர கீதங்களும், ஆற்றிய சொற்பொழிவுகளும் மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், சுதந்திர வேட்கையையும் விதைத்தன. சிவத்தின் சொற்பொழிவுகளைக் கேட்க எண்ணற்ற மக்கள் கூடத் துவங்கினர். இதன் ஒரு பகுதியாக கல்கத்தா சிறையிலிருந்து சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திரா பாலின் விடுதலையைக் கொண்டாடும் விதத்தில் சிவம் நெல்லையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் உரையாற்றினார். அப்போதைய கலெக்டர் விஞ்ச் (Wynch) போட்ட தடை ஆணையை மீறி சிவம் கூட்டம் நடத்தியதால் ஆங்கில அரசு மார்ச் 12, 1908ல் ராஜத்துரோகம் என்று காரணம் காட்டி சிவத்தை கைது செய்தது. சுமார் 4 ஆண்டுகள் பாளையங்கோட்டை சிறையில் கழித்த சிவம் நவம்பர் 2, 1912ல் விடுதலைச் செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சிவம் சென்னையில் குடியேறினார். 1915 ல் சிவம் மனைவி மீனாட்சி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். சென்னையில் இருந்த காலகட்டத்தில் சிவம், ‘ஞானபாநு’ என்ற மாத இதழைத் துவக்கினார். பின்பு, 1916ல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார் சிவம். இவற்றோடு சுமார் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதினார். 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார் சிவம். 1921ல் ‘ஸ்வதந்த்ரானந்தர்’ என்ற பெயரில் துறவி போன்று காவியுடை அணியத் துவங்கினார்.


நவம்பர் 17, 1921ல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காக சிவம் கைது செய்யப்பட்டு, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். திருச்சி சிறையில்  பல கொடிய சித்திரவதைக்கு உள்ளான சிவத்திற்கு தொழு நோய்த்தொற்று ஏற்பட்டது. இளம் வயதிலேயே தொழுநோய் பீடித்த சிவத்தின் தேக்கு போன்ற உடல் காய்ந்த சருகாக மாறத் தொடங்கியது. நோய்த்தொற்று மற்றோரையும் பாதிக்கும் என்ற காரணத்தால் ஜனவரி 12, 1922ல் விடுதலை செய்யப்பட்டார் சிவம்.
விடுதலையான சிவம் சென்னையில் சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் துவங்கினார். இவருக்கு ஏற்பட்ட தொழுநோயால் இரயில் பயணத்திற்கு ஆங்கில அரசு தடை விதித்தது. இதன் காரணமாக சிவம் நடை மற்றும் வண்டி பயணம் மூலம் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். 1923ல் தருமபுரி, கோவை வழியாக பாப்பாரப்பட்டி வந்தடைந்தார். அங்கு தனது நெறுங்கிய நண்பர் தியாகி சின்னமுத்து முதலியார் கொடுத்த பொருளுதவி மூலம் 6 ஏக்கர் நிலம் வாங்கி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார் சிவம்.

அதற்கு ‘பாரதபுரம்’ என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை சுதந்திர வீரர் ‘தேச பந்து’ சித்தரஞ்சன்தாஸைக் கொண்டு செய்வித்தார். இந்நிலையில் 1924ல் காசியில் வசித்து வந்த சிவத்தின் தாயார் காலமானார். பாரதமாதா கோயில் திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் சிவத்தை வீழ்த்தத் தொடங்கியது. தொழு நோயுடன் போராடி தோற்ற சிவம் ஜூலை 23ஆம் தேதி 1925 வியாழக்கிழமை காலை 5 மணியளவில், தம்முடைய 41ஆவது வயதில் தன் இன்னுயிர் நீத்து நம்மிடமிருந்து மறைந்தார். தான் வாழ்ந்த சிறிய காலத்திலேயே பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், நூலாசிரியர் ஆன்மீகவாதி, சுதந்திரப்போராளி போன்ற பன்முகத்தன்மையில் பவனி வந்தவர் சிவம். தான் முழுவதும் வாழ்ந்த இளம் வாழ்க்கையை இடைவெளியின்றி நாட்டிற்காகவே இட்டு கழித்த சிவம் வெறும் மனிதரல்ல – மகான்.

ஜெய் ஹிந்த்!!

திரு.ஸ்ரீகுமார் கண்ணன்


Share it if you like it