சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று

சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று

Share it if you like it

(பாரத மாதாவுக்கு கோவிலைக் கட்ட விரும்பிய ஒரு தேசப் பற்றாளர்)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில், 1884 அக்டோபர் 4 ஆம் தேதி, ராஜம் ஐயர் என்பவருக்கும் நாகலக்ஷ்மிக்கும் பிறந்த செல்வன், சுப்பிரமணிய சிவா ஆவார்.

இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை கொண்ட சுப்பிரமணிய சிவா, 1899 இல் மீனாட்சி என்ற பெண்மணியை மணந்தார். தன் பள்ளி கல்வியை மதுரையில் முடித்து விட்டு, மேல் படிப்புக்கு திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் சென்றார்.

1902க்குப் பிறகு, தனது படிப்பை முடித்து, திருவிதாங்கூரிலிருந்து திரும்பிய போது, ​​அவர் காவி உடை அணிந்து, ஒரு சன்யாசியாக மாறி, ‘சுப்பிரமணிய சிவா’ என்று தன்னை அழைத்துக் கொண்டு, இந்திய சுதந்திரத்தின் தீவிர பிரச்சாரகராக ஆனார்.

சுப்பிரமணிய ஐயராக பிறந்து, சுப்பிரமணிய சிவாவாக பெயர் மாறிய அந்த புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர், பாரத மாதா மற்றும் தமிழ் மொழி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரது இதயத்திலிருந்து பொங்கும் உணர்வுகளும், நாவிலிருந்து எழும் வார்த்தைகளும், தமிழாக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு, தமிழ் பற்றாளர் அவர். ‘ஞானபானு’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த போது, தேச விடுதலையை மையமாக கொண்ட, பல தமிழ் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி, அந்த தமிழை பாரத மாதாவுக்கு சமர்ப்பித்தார், சுப்பிரமணிய சிவா. தமிழை நேசித்தவராக, தமிழ் பக்தராக இருப்பினும், அவர் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1906ல் ஆர்ய சமாஜ் மக்களின் பேச்சை கேட்டு, தேசத்தின் அவல நிலையை அறிந்து, ஆங்கிலேயர்களிடமிருந்து பாரத மாதாவின் விடுதலைக்கான கட்டாயத்தை உணர்ந்து, தேச பக்தியின் மார்கத்தை தேர்ந்தெடுத்தார் சுப்பிரமணிய சிவா.

லோக்மானிய பால கங்காதர திலகரின் தேச பக்தி சிந்தனையால் ஈர்க்கப்பட்ட சுப்பிரமணிய சிவா, பால கங்காதரரின் கருத்துகளை பின் பற்றி, ஒரு புகழ்பெற்ற தேசியவாதியாக மாறி, சிறந்த தேச பக்தரானார். மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன், நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார், சிவா.

வ.உ.சி. ஏற்பாடு செய்த கூட்டத்தில், சுதந்திரத்திற்கான சொற்பொழிவை ஆற்றியதால், வ.உ.சி., சிவா கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று செக்கிழுத்தனர்.

தனது பாரத தேசத்தின் விடுதலைக்காக, குரல் கொடுத்த சுப்பிரமண்ய சிவாவை ஆங்கிலேயர்கள், தங்களது நிர்வாகத்திற்கு பங்கம் விளைவிப்பதாகவும், ஆட்சிக்கு எதிராக செயல் படுவதாகவும் கருதி, தேசத்துரோக (sedition) குற்றம் சாட்டி, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124A இன் கீழ், மெட்ராஸ் மாகாணத்தின் தேசத் துரோகத்திற்கான முதல் நபராக, 1908ல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சுப்பிரமண்ய சிவா, ஆங்கில ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்திய மண்ணில் அவர்கள் செய்த ஒடுக்குமுறை மற்றும் இந்தியர்கள் மீது அவர்கள் காட்டிய இன பாகுபாட்டிற்கு (racial discrimination) எதிராக போராடினார். தொழிலாளர்களின் நலத்துக்காகவும், பல போராட்டங்களை முன் நின்று நடத்தி, வைத்தார். ஒரு சமூக நீதிக்கான போராளியாகவும், இவரை அழைக்கலாம்.

உண்மை உணர்வை வெளிப்படுத்தும் புலமை மிக்க, சொற்பொழிவு ஆற்றும் திறனை கொண்ட சுப்பிரமணிய சிவா, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட, இளைஞர்களை ஊக்குவித்தார். பிரிட்டிஷார், அவரை பல முறை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனாலும், இந்திய சுதந்திரத்திற்காக போராடும், அந்த தமிழரின் வீரியத்தை, ஆங்கிலேயர்களால் அடக்க முடியவில்லை. தேசியவாதம், தேசிய தலைவர்கள் மற்றும் பாரத சுதந்திரத்திற்காக போராட வேண்டியதன் அவசியத்தை குறித்து, பல மேடைகளில் பேசி இருக்கிறார்.

திருமணமாகி இருந்தாலும் துறவியாக வாழ்ந்த சிவா, 1915 இல் அவரது மனைவியின் மரணத்திற்கு பிறகு, தேசத்தின் விடுதலைக்காக, தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தார். தான் தெய்வமாக வணங்கும் ‘பாரத மாதா’வுக்கு, ஒரு கோவில் கூட இல்லை என்று உணர்ந்து, வேதனை அடைந்த சுப்பிரமணிய சிவா, பாரத மாதாவுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழத் தொடங்கினார். 

கோவில் கட்டுமானத்திற்காக, நன்கொடைகளைப் பெற முடிவு செய்தார். அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டதால், ஆங்கிலேயர்கள் அவரை, ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. எந்த பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்துவதில், அவருக்கு தடை விதிக்க பட்ட போதும், அவர் லட்சியத்திலிருந்து பின் வாங்கவில்லை. மனதை தளரவிடாமல், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதற்கான உதாரணமாக திகழ்ந்து, மன உறுதிக்கு முன் எந்த தடையும் நிற்பதில்லை என்ற எடுக்காட்டாக இருந்து, வழி நிச்சயம் தென்படும் என்ற நம்பிக்கையுடன், நடக்கத் தொடங்கினார், காவி புரட்சி சுதந்திர போராட்ட வீரர்.

லட்சிய வெறி கொண்ட மனிதன், எந்த முள் தடுப்பையும் கடந்து செல்வான், எந்த புயலையும் எதிர்கொள்வான். சுப்பிரமணிய சிவாவும் லட்சிய வெறி கொண்டவர். வெகு தூரத்திற்கு, பல இடங்களுக்கு கால் நடையாகவே பயணம் செய்து, நன்கொடைகளை சேகரித்தார். தன் உடல் நலம், சீர் குலைந்த நிலையிலும், சென்ற இடம் எல்லாம் விடுதலைக்கான பிரச்சாரமும் செய்தார்.

பாப்பரப்பட்டி என்ற கிராமத்துக்கு வந்த சுப்பிரமணிய சிவாவுக்கு, அங்குள்ள சின்னமுத்து என்பவர், ஆறு ஏக்கர் நிலத்தை கோவில் கட்ட தானமாக கொடுத்தார். கோவில் கட்டுவதற்கான அடிக்கல், 1923 இல் நாட்டப்பட்டது. ஆனால், 1925 ஜூலை 23 அன்று, சுப்பிரமணிய சிவா இறந்தவுடன், கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

சுப்பிரமணிய சிவாவால், பாரத மாதாவுக்கு ஒரு கோவில் கட்ட முடியவில்லை என்றாலும், அவர் நூற்றுக்கணக்கான தமிழர்களின்  இதயங்களை, பாரத மாதாவின் கோவிலாக அமைத்து, அதில் தேச பக்தியின் மிக உயர்ந்த தார்மீக பீடத்தில், நம் பாரத மாதாவை அமர செய்து, ‘வந்தே மாதரம்’ என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து, பாரத தாயை வணங்க செய்தாரே, அது மிகப் பெரிய வெற்றி அல்லவா? 
 
ஆங்கிலேயர்களை எதிர்த்து, பாரத விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தமிழர்களின் பங்களிப்பில், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பும், என்றும் நினைவு கூறும் வகையில் மகத்தானது. 
 
                     - Dr M விஜயா
 
 
 

Share it if you like it