ஆப்பிரிக்க நாடான சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது ஒரு வெகுஜன படுகொலை என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்திருக்கிறது.
சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்கிற துணை ராணுவப்படை களமிறங்கியது. இந்த மோதம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி உச்சகட்டத்தை எட்டியது. தலைநகர் கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை துணை ராணுவ படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. பின்னர், இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. தொடர்ந்து, ஆபரேஷன் காவேரி என்கிற பெயரில் சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு களமிறங்கியது. அதன்படி, 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன் பிறகும், சூடானில் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இது வெகுஜன படுகொலை என்று ஐ.நா. சபை கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறது. எனவே, இதுகுறித்து ஐ.நா. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.