இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தை சமாளிப்பது என்பது சவாலான விஷயமாகும். அதிலும் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் சீனா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் வெப்ப அலையால் நீர்வளங்கள் வறண்டு கடும் வறட்சி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவில் இந்த வருடம் கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் பலவகையான உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். உடலில் நீர் அதிகளவு வற்றுவதால் தலைச்சுற்றல் மற்றும் சோர்வு ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டால் மயக்கம், வலிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக மாறவும் வாய்ப்புள்ளது.
இதை தவிர கோடை காலத்தில் சளி, ஜுரம், அம்மை, மலேரியா உள்ளிட்ட பலவகையான நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் கோடை காலத்தில் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். வெப்ப அலையால் இந்தியாவில் ஆண்டுதோறும் சில உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. உதாரணமாக கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவை கடுமையான வெப்ப அலை தாக்கியது. சுமார் 116 டிகிரி வரை வெப்பம் அதிகரித்ததால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பிறகு வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க துவங்கியது. அதன் விளைவாக வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இருப்பினும் பொதுமக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
முதியவர்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் அன்றாட வேலைகளுக்காக வெளியில் பயணம் மேற்கொள்பவர்கள், சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், காவல்துறையினர், துப்புரவு தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக முதியவர்கள் அதிலும் தனிமையில் வாழும் முதியவர்கள், இதயநோய், நீரிழிவு போன்ற உடல்நிலை பாதிப்புகள் உள்ளவர்கள். உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பக்க விளைவுகள் கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறு குழந்தைகள், உடல் பருமனானவர்கள் ஆகியோர் வெப்பத்தால் அதிகளவு பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். இவர்கள் தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்: தளர்வான ஆடைகள், மென்மையான பருத்தி, கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் வெண்ணிற ஆடைகளை அணிவது நலம். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வெப்பம் அதிகளவில் இல்லாத அதிகாலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நாள்தோறும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம் அல்லது ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் விரைவாக புத்துணர்சி பெறும். மேலும் குளிர்ந்த நீரில் நனைத்த துணிகளால் முகத்தையும் உடலையும் அவ்வப்போது துடைத்து கொள்ளலாம்.
வெளியே குளிர்ந்த காற்று அடிக்கும் போது கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் போது அடர்த்தியான நிறங்களில் உள்ள திரை சீலைகளால் ஜன்னல், கதவுகளை மூடுவதன் மூலம் வெப்பம் வீடுகளுக்குள் வருவதை தவிர்க்கலாம். வெளியில் செல்லும் போது தேவையான தண்ணீரை உடன் எடுத்து செல்லவும். நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், நன்னாறி சர்பத்து, கற்றாழை, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக கொழுப்பு நிறைந்த, காரமான உணவுகள், காபி, மதுபானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏசி இருந்தாலும் அவ்வப்போது மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அறையில் உள்ள காற்றோட்டத்தை அதிகரித்து குளிர்ச்சியாக வைக்க மின்விசிறிகள் உதவும்.
நாள்தோறும் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் 2 முறை குளிப்பது நலம். முடிந்த அளவு நேரடி சூரிய வெளிச்சத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்பவர்கள் கருப்பு நிற குடை, தொப்பி மற்றும் சன்ஸ்கிரீன் அணிந்து செல்லலாம். காரில் அதிக நேரம் குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ விடக்கூடாது. நோய்வாய்ப்பட்ட அல்லது வயது முதிர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வபோது தொடர்பில் இருந்து பாதுகாப்பானது. வீடுகளில் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை சேமித்து வைக்கவும். இதனால் அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். உங்கள் மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனர் நன்றாகச் செயல்படுகிறதா எனச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால் உங்கள் ஏர் கண்டிஷனரை சர்வீஸ் செய்யுங்கள்.
கோடை காலத்தில் மின் தடை அதிகரிப்பது வழக்கம். எனவே பேட்டரியில் இயங்கும் கை மின்விசிறிகள், இன்வெர்ட்டர்களை வீடுகளில் வைத்திருப்பது அவசியம். வெப்பம் தொடர்பான நோயின் அறிகுறிகளை கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இந்த கோடை கால வெப்பத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். அரசாங்கமும் கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.