குஜராத் மக்கள் புத்தாண்டின் முதல் நாளான நேற்று சூரியனின் முதல் கதிர் மூலம் மாநிலத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் வெகுஜன சூரிய நமஸ்காரம் செய்து வரலாறுச் சாதனை படைத்திருக்கிறார்கள். இவற்றில் மாநிலத்தின் 51 வரலாற்று இடங்கள் அடங்கும்.
மகேசனா மாவட்டம் மோதேராவில் உள்ள சின்னமான மோதேரா சூரியன் கோவிலில் நடைபெற்ற விழாவில் 2,500-க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்தனர். இவ்விழாவில் மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், மாநில அளவிலான மெகா சூர்ய நமஸ்காரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சூர்ய நமஸ்காரப் பயிற்சியை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக குஜராத் மாநில யோக் போர்டு மற்றும் மாநில அரசாங்கத்தால் மாநிலத்தில் முதல் முறையாக இந்த ஒரு மாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
புத்தாண்டையொட்டி, குஜராத் மாநிலம் செய்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்ததன் மூலம் குஜராத் 2024-ம் ஆண்டை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றது.
நாம் அனைவரும் அறிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அரங்குகளில் சின்னமான மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
