சுவாமி விவேகானந்தர்
விவேகானந்தர் எனும் பெயரைப் படித்தவுடனே, உள்ளுக்குள் உற்சாகம் பீறிட்டு வருகிறது தானே? ஆமாம்,
தேச பக்தர்களுக்கும், தெய்வ பக்தர்களுக்கும் அப்படித்தான் வரும்!
இளைஞர்களுக்கு இனம் புரியாத வீரம் வீறுகொண்டு வரும்!
பெரியவர்களுக்கு ஞான உணர்வும் பேரமைதியும் தோன்றும்!
பெண்களுக்குப் பேரன்பும் பெருமதிப்பும் பொங்கி வரும்!
ஏழை-எளியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நன்றியுணர்வு பொங்கும்!
இந்து தர்மத்தின் மீது பற்றுக் கொண்ட எல்லோருக்கும் நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாயும்!
அப்படிப்பட்ட விவேகானந்தர் குறித்துத் தான் பார்க்கப் போகிறோம்.
1863ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ஆம் தேதி, வங்காளத்தில் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல, பால்ய பருவத்திலேயே துறுதுறு, விறுவிறுவென இருந்தார். பள்ளி, கல்லூரிகளில் மிக நன்றாகப் படித்தார். எல்லோர் மீதும் பேரன்பு, இரக்க குணம், ஆழ்ந்த ஞானம், விவாதத் திறமை முதலியவை எல்லாம் அவரது குணமாகின. பக்திப் பாடல்கள் பாடுவதும், ஆன்மிகம் குறித்து சிந்திப்பதும் அவரது வழக்கமாயிற்று.
கடவுள் குறித்தான அவரது தீவிரமானத் தேடல், இறுதியாக அவரை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடத்தில் கொண்டு போய் சேர்த்தது. சுவாமி விவேகானந்தர் சொல்லியது போல, அவதாரங்களில் எல்லாம் மிகச்சிறந்த அவதாரமான, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நரேந்திரநாத் தத்தாக இருந்த இளைஞனை, இறைவனையும் தன்னையும் உணரச் செய்தார்! அன்று முதல், தனது வாழ்வை முழுவதுமாக அடுத்தவர்களுக்காகவும், தேசத்திற்காகவும், தெய்வீகப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் வீரத்துறவி என்றும், தேச பக்த துறவி என்றும் பரவலாக அறியப்படுகிறார். நம் நாட்டின் எல்லா துறவிகளுமே தேச பக்திக் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சுவாமி விவேகானந்தரை மட்டும் ஏன் தேச பக்த துறவி என்கிறோம்? எல்லா துறவிகளை விடவும் மிக அதிகமாக தேசம் குறித்து சிந்தித்தார் சுவாமி விவேகானந்தர். அதனால் தான் அவரை தேச பக்த துறவி என்கிறோம்.
நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தின் வேராக இருந்தவர், சுவாமி விவேகானந்தர்! ‘அரசியல் சுதந்திரம் என்பது ஒரு நாட்டுக்கான அடிப்படை தேவை’ என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார், சுவாமிஜி. அரசியல் சுதந்திரத்தின் இன்றியமையாமை குறித்து, தனது நம்பிக்கை நாயகர்களான இளைஞர்களிடத்து நிறைய பேசி, ஊக்கப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, 1901ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி, வங்காளத்தின் ஹேமச்சந்திர கோஷ் மற்றும் அவரோடு இருந்த இளைஞர்களிடத்தே தேச விடுதலை குறித்து விரிவாகவும், தீர்க்கமாகவும் பேசியிருக்கிறார் சுவாமிஜி.
“நமது முதல் தேவை – சுதந்திரம்! அரசியல் சுதந்திரம். எனவே, நமது முதல் கடமை என்னவென்றால், மாபெரும் சக்திகளை ஒன்று திரட்டி, ஆங்கிலேயர்களை இந்த தேசத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்! வெறும் மேடை பேச்சுகளால் அல்ல; மாறாக, வெளிப்படையான உடல் வலிமையினால், திறந்த போரின் மூலமாக, திட்டமிடப்பட்ட முறையான நேரடித் தாக்குதல்களின் மூலமாக! ஒரே தலைமையின் கீழ், ஒருங்கிணைக்கப்பட்ட செயல்கள் தான் வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் தாய்த்திருநாட்டின் குருதி வெள்ளத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்! உங்களைப் போன்ற இளைஞர்கள் இத்தகைய அரக்கர்களை அழிக்க வேண்டும்! இந்த தேசத்தை ஆளுவதற்கு ஆங்கிலேயர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்தியா நமத பிறந்த தேசம்! ஊடுருவல்காரர்களையும், கொள்ளைக்காரர்களையும் இந்த தேசத்தை விட்டு விரட்டியடிப்பது மட்டுமே உங்களின் ஒரே மதம், ஒரே கொள்கை, செயல்படுத்தப்படுவதற்கான ஒரே திட்டம்!”
ஹேமச்சந்திர கோஷ் உள்ளிட்ட இளைஞர்களிடையே இப்படி பேசியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் அளவுக்கு தேச விடுதலைக் குறித்துப் பேசிய இன்னொரு துறவியைக் காண்பது, அரிது.
தான் சந்திக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட நபர்களிடம் நேரடியாக நாட்டு விடுதலைக் குறித்து சுவாமிஜி பேசியது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அவரது எழுத்துக்களால் உந்தப்பட்டுத் தங்களை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டோர் பலர். சாதாரண நபர்கள் மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களும் கூட சுவாமிஜியின் எழுத்துக்களால் ஊக்கம் பெற்று, விடுதலை வேள்வியில் இன்னும் வேகமாக செயல்பட்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில தலைவர்களின் கூற்றுகளைப் பார்ப்போம்.
“நான் விவேகானந்தரின் புத்தகங்களை மிகவும் ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவ்வாறு ஆழ்ந்து படித்ததினால், என்னுடைய தாய்த் திருநாட்டின் மீது உள்ள அன்பு கலந்த பக்தி ஆயிரம் மடங்கு பெருகி விட்டது”. இப்படி சொல்லியிருப்பது யார் தெரியுமா? மகாத்மா காந்திஜி.
“சுவாமி விவேகானந்தரை நவீன தேசிய எழுச்சியின் ஆன்மிகத் தந்தையாகவே கருதலாம். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், நான் அவர் கால்களிலேயே கிடந்திருப்பேன்” – இப்படி சொல்லியிருப்பது மாபெரும் வீரத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
“சுவாமிஜி இந்தியாவின் நவீன தேசிய வரலாற்றினை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராவார். பிற்காலத்தில் தேசிய எழுச்சி வரலாற்றில் வீறுகொண்டு பங்கேற்றவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தர் எழுத்துக்களால் உந்துதலைப் பெற்றவராவர். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, அவர் இன்றைய இந்தியாவிற்குப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்” – இப்படி கூறியிருப்பது யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், இப்படி இயம்பியிருப்பது ஜவஹர்லால் நேரு.
“சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றினார். இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறார். அவரில்லாவிட்டால், நாம் நம்முடைய மதத்தை இழந்திருப்போம்; சுதந்திரத்தை அடைந்திருக்க மாட்டோம். ஆதலால், எல்லாவற்றிற்கும் நாம் சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்” – இப்படி மிகச்சரியாகவும், ஆணித்தரமாகவும் சொல்லியிருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.
திலகர் பெருமானும், சுவாமிஜியும் 10 நாட்கள் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சுவாமிஜி ஆன்மிகம் குறித்துப் பேசியதைவிட தேசம் குறித்துத் தான் அதிகமாகப் பேசியதாக திலகர் குறிப்பிட்டிருக்கிறார்.
சுவாமிஜியின் தேச பக்தி குறித்துப் பலரும் வியந்து பேசியிருக்கிறார்கள். “அவருடைய தேச பக்தி முழுமை பெற்றதாகும்” என்று ஒரு அமெரிக்க பத்திரிக்கை எழுதியது. “என்னுடைய நாடு என்று சுவாமிஜி கூறும் போது அது மனதைத் தொடும் விதமாக அமைகிறது” என்றொரு பத்திரிக்கை எழுதியது.
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றி, இந்து மதம் குறித்தும் பாரத நாடு குறித்தும் மேற்குலக நாடுகள் கொண்டிருந்தத் தவறானக் கண்ணோட்டங்களை மாற்றியமைத்த சுவாமிஜி, 1897ல் நம் நாட்டுக்குத் திரும்பியதிலிருந்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். என்றாலும், அவர் அதிகமாக சிந்தித்தது தேச விடுதலைப் பற்றி தான். “அடிமையாய் இருப்பதை விட்டொழியுங்கள். அடுத்த 50 ஆண்டுகளுக்கு இது ஒன்று தான் (அதாவது, அடிமைபட்டுக் கிடப்பதிலிருந்து மீண்டு வருவது மட்டும் தான்) நம் தலையாயப் பணி. தாய் நாடாகிய அன்னை இந்தியாவுக்கு நாம் ஆற்ற வேண்டியப் பணி!” என்று தொடர்ந்து எல்லோரிடமும் வலியுறுத்தி வந்தார் சுவாமிஜி.
‘புயல் போன்ற சந்நியாசி’, ‘இறையருள் பெற்ற பேச்சாளர்’, ‘அமெரிக்காவிலுள்ள அனைத்துப் பேராசிரியர்களும் கற்றறிந்ததை விட மிக அதிகமாக கற்றறிந்தவர்’, ‘அமெரிக்கப் பேராசிரியர்கள் சுவாமிஜியின் முன்பு சிறியவர்களாகவே கருதப்படுவர்’ என்றெல்லாம் அமெரிக்கர்களால் புகழப்பட்ட சுவாமி விவேகானந்தர், அந்தப் புகழ் மழையில் ஒருபோதும் மயங்கவில்லை. அவரது மனம் புண்ணிய பூமியான பாரதம் குறித்தும், அதன் விடுதலைக் குறித்தும், அதன் மக்கள் நலன் குறித்தும் மட்டுமே சிந்தித்து வந்தது.
சுவாமிஜி எப்போதுமே பாரத நாடு குறித்து, மிகவும் உயர்வாகவே சிந்தித்து வந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு சென்று விட்டுத் தாய்நாடு திரும்பயிருந்த வேளையில், ஒரு ஆங்கிலேயர் சுவாமிஜியிடம் கேட்கிறார்…
“சுவாமிஜி, உங்களுடைய தாய் நாட்டைவிட்டு நான்கு ஆண்டுகள் சக்தி மிகுந்த மேற்கத்திய ஆடம்பரங்களில் திளைத்தப் பின்னர் எப்படி பார்க்கிறீர்கள்?”
அதற்கு சுவாமிஜியின் பதில்…
“இந்தியத் தாய்த்திருநாட்டை இங்கு வரும் முன்பு நேசித்தேன். இப்போது இந்தியாவின் தூசியும், மண்ணும் கூட எனக்குப் புனிதமாகி விட்டன! இந்தியக் காற்றும் எனக்குப் புனிதமாகி விட்டது! இந்தியா ஒரு புனித பூமி! புனித யாத்திரை மேற்கொள்ள உகந்த பூமி! அதுவே புனித தீர்த்தங்களின் சங்கமமும் ஆகும்!”
இப்படி எப்போதுமே தேசம் குறித்து சிந்தித்து வந்த அந்த தேச பக்த துறவி, “நான் என்னை ஒரு இந்து என்று அழைத்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்! நான் நம் தாய்த் திருநாடான பாரத நாட்டின் புதல்வன் என்று அறிவதில் பெருமையடைகிறேன். நீங்கள் யாவரும் மிகப்பெரிய தவசிகளும், பெருமைமிகு ஞானிகளும், முனிவர்களும் வாழ்ந்த நாட்டின் வழி வந்தவர்கள். கடவுளின் கருணையால் உங்கள் யாவருக்கும் அதே பெருமை இருக்கட்டும்! உங்களுடைய மூதாதையர்களுக்கு இருந்த அதே நம்பிக்கை உங்கள் குருதியிலும் புகுந்து பாயட்டும்! உங்களுடைய வாழ்க்கையின் பகுதியாக, அது மாறட்டும்! அந்த நம்பிக்கை உலகம் உய்ய வழிகாட்டும் வகையில் செயல்படட்டும்!” என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
அவரது வழியில் நாமும் நாட்டுப்பற்றோடும், இந்து மத பற்றோடும் நடைபோடுவோம்…
- வீர. திருநாவுக்கரசு