தமிழ் நாடக உலகின் துருவ நட்சத்திரமாக விளங்கும் டி.கே. சண்முகம் !

தமிழ் நாடக உலகின் துருவ நட்சத்திரமாக விளங்கும் டி.கே. சண்முகம் !

Share it if you like it

தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ‘அவ்வை’ டி.கே.சண்முகம் (T.K.Shanmugam)

இவர் திருவனந்தபுரம் அடுத்த புத்தன்சந்தை என்ற இடத்தில் டி.எஸ். கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதிக்கு ஏப்ரல் 26, 1912 அன்று மூன்றாம் மகனாகப் பிறந்தார். இவரது முழு பெயர் திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம். 2-ம் வகுப்பு வரை பயின்றார். நாடக நடிகரான தந்தை இவரையும், சகோதரர்களையும் ஒரு நாடக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.

ஆறு வயதில் மேடை ஏறினார். இவரது நடிப்புத் திறனைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள், ‘அபிமன்யு சுந்தரி’ நாடகத்தில் அபிமன்யுவாக நடிக்க வைத்தார். சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியாரிடமும் நடிப்புப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார்.

பத்து வயதில் ‘மனோகரா’ வேடத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ‘நாடகத் தந்தை’ பம்மல் சம்பந்தனார் பெரிதும் வியந்து பாராட்டினார். இவரது வசன உச்சரிப்பும், தோற்றப் பொலிவும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று பாராட்டப்பட்டார்.

இவரும் சகோதரர்களும் இணைந்து 1925-ல் பால சண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர்.

அடுத்த 25 ஆண்டுகளில் இக்குழு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றது. இக்குழு மூடப்பட்ட பிறகு, டிகேஎஸ் நாடகக் குழு என்ற பெயரில் புதிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நடித்தார்.

இவரது நாடகங்கள் தேசபக்தியைத் தட்டி எழுப்பின. சமூக மறுமலர்ச்சியையும் பிரதிபலித்தன. இவரது ‘தேசபக்தி’, ‘கதரின் வெற்றி’ ஆகிய நாடகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. ‘மேனகா’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நாடெங்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிகுந்திருந்த நேரம் அது. டி.கே.எஸ். சுதந்திரக் கனலை எழுப்பும் நாடகங்களை நடத்த ஆர்வம் கொண்டார். வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை ‘தேசபக்தி’ என்ற தலைப்பில் நாடகமாக்கி அளித்தார் மதுரகவி பாஸ்கரதாஸ். அதில்தான் முதன்முதலாக பாரதியார் பாடல்கள் இடம்பெற்றன. 1931 மே 19 அன்று அந்நாடகம் அரங்கேற்றம் கண்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் பிரிட்டிஷாரால் அந்நாடகம் தடை செய்யப்பட்டது.
சளைக்காமல் வேறு பல சமூக நாடகங்களை அரங்கேற்றம் செய்தார்

சண்முகத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது ‘அவ்வையார்’ நாடகம். 1943-ல் வெளியான அந்நாடகத்தில் அவ்வையார் வேடத்தில் நடித்து அவர் பெரும்புகழ் பெற்றார். 32 வயதே நிரம்பிய டி.கே.எஸ். ஒரு முதியவளாகத் தனது தோற்றத்தையும், பேச்சையும் மாற்றிக் கொண்டு, அவ்வையாகவே வாழ்ந்து காட்டியது பார்த்தோரைப் பிரமிக்க வைத்தது; அவருக்கு ‘அவ்வை சண்முகம்’ என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. ம.பொ.சி உள்ளிட்ட தமிழறிஞர்களின் பாராட்டையும், நட்பையும் பெற்றுக் கொடுத்தது. தான் அவ்வையாராக நடித்தது பற்றி டி.கே.எஸ். “என்னைப் பொறுத்தவரையில் ஔவையாராக நடித்த பின் எனக்கு ஆன்மீக நினைவு ஏற்பட்டது” என்கிறார் தனது வாழ்க்கைக் குறிப்பில்.

இவரது முயற்சியால் 1950-ல் நாடகக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராகச் செயல்பட்டார். இவரது முயற்சியால் நாடகத்துக்கான கேளிக்கை வரிக்கு விலக்கு கிடைத்தது. ‘நடிகன் குரல்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக 3 ஆண்டுகள் செயல்பட்டார்.

சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர், சங்கீத நாடக சங்கம், டெல்லி சங்கீத நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நல்ல இசை ஞானம் கொண்டவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனைகள், பாரதியாரின் பாடல்களைப் பாடி நடித்தார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக 1968-ல் நியமிக்கப்பட்டார்.

கோலாலம்பூரில் 1966-ல் முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘தமிழ் நாடக வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். நாடகம், திரைப்படம் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’, ‘நாடகக் கலை’, ‘நெஞ்சு மறக்குதில்லையே’, ‘எனது நாடக வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பாரதியாரிடம் அளவுகடந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தார். முத்தமிழ் கலாவித்வ ரத்தினம், நாடக வேந்தர், நடிகர் கோ, பத்ம, சிறந்த நாடக நடிகர் விருது என ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேல் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்த ‘அவ்வை’ டி.கே.சண்முகம் 61-வது வயதில் (15/02/1973) மறைந்தார்.
தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்குப் பாடுபட்ட டி.கே. சண்முகம், அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவர் வாழ்ந்த தெருவுக்கு ‘அவ்வை சண்முகம் சாலை’ என்று பெயர் சூட்டியது. தமிழ் நாடக உலகின் துருவ நட்சத்திரமாக டி.கே. சண்முகம் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

– Articles by மணி பரமசிவம்


Share it if you like it