‘இதுதான் கர்மா’: அக்தருக்கு ஷமி பதிலடி!

‘இதுதான் கர்மா’: அக்தருக்கு ஷமி பதிலடி!

Share it if you like it

டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், இதயம் நொறுங்குவதுபோல எமோஜி போட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தருக்கு, “சாரி பிரதர். இதுதான் கர்மா” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரில் கடந்த 10-ம் தேதி இந்தியாவும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதின. இதில், இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அப்போது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், இந்திய அணியை கிண்டல் செய்திருந்தார். குறிப்பாக, முகமது ஷமி பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதாவது, “ஐ.சி.சி. போட்டிகளுக்கு வரும்போதெல்லாம் இந்திய அணி மிகவும் குறைந்த திறனுடன் இருக்கிறது. முதலில் இந்தியாவின் கேப்டன் யார் என்று பார்க்க வேண்டும். அதேபோல, பந்து வீச்சு துறையின் தேர்வு குழப்பமாக இருந்தது. முகமது ஷமியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அவருக்கு அந்த தகுதி இல்லை” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தோல்வியை அந்நாட்டு ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் மிகுந்த சோகத்துடன் எதிர்கொண்டனர். மேலும், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் சோகத்தை வெளிப்படுத்தினர். இந்த சூழலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் நொறுங்குவது போல எமோஜிக்களை போட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்னிக்கவும் சகோதரா. இதைத்தான் கர்மா என்பார்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். ஷமியின் ட்வீட்டிற்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.


Share it if you like it